/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நாலே நாலு பேர் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி ஐகோர்ட் அனுமதி
/
நாலே நாலு பேர் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி ஐகோர்ட் அனுமதி
நாலே நாலு பேர் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி ஐகோர்ட் அனுமதி
நாலே நாலு பேர் மட்டும் போராட்டம் நடத்த அனுமதி ஐகோர்ட் அனுமதி
ADDED : நவ 16, 2025 02:44 AM
சென்னை: துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்த்து, உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த, நிபந்தனைகளுடன் அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில், துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதை எதிர்க்கும் வகையில், உழைப்போர் உரிமை இயக்கத்தினர், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரினர். போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து, போராட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக்கோரி, உழைப்போர் உரிமை இயக்க மாநில பொருளாளர் மோகன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
அம்பத்துாரில் உள்ள அலுவலக வளாகத்தில், உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளது.
எனவே, ஆவடி போலீஸ் கமிஷனர், அம்பத்துார் இன்ஸ்பெக்டர் ஆகியோர், வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். உண்ணாவிரதத்திற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும்.
உண்ணாவிரத போராட்டத்தை, ஜெனோவா, பாரதி, கீதா, வசந்தி ஆகியோர் கடைபிடிக்கலாம். அவர்களில் ஒருவர் வாபஸ் பெற்றால் வேறு ஒருவர் தொடரலாம்.
அதேசமயம் எண்ணிக்கையை அதிகரிக்கக் கூடாது. உண்ணாவிரத இடத்தில், பார்வையாளர்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டக்கூடாது.
வளாகத்துக்கு வெளியே பந்தல், நாற்காலிகள் போடக்கூடாது. பொதுமக்களுக்கும், சட்டம் - ஒழுங்குக்கும் எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது.
உண்ணாவிரதம் இருப்பவர்களின் உடல்நலனை தினமும் பரிசோதிக்க, அரசு மருத்துவரை அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

