/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சர்ச்சில் சட்டவிரோத கட்டுமானம் அகற்ற ஐகோர்ட் 3 மாதம் 'கெடு'
/
சர்ச்சில் சட்டவிரோத கட்டுமானம் அகற்ற ஐகோர்ட் 3 மாதம் 'கெடு'
சர்ச்சில் சட்டவிரோத கட்டுமானம் அகற்ற ஐகோர்ட் 3 மாதம் 'கெடு'
சர்ச்சில் சட்டவிரோத கட்டுமானம் அகற்ற ஐகோர்ட் 3 மாதம் 'கெடு'
ADDED : ஏப் 03, 2025 12:02 AM
சென்னை, சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம் செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள சர்ச்சில், உரிய திட்ட அனுமதி பெறாமல், விதிகளை மீறி கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், புதிய கட்டுமானங்களுக்கு தடை கோரியும், பிலோமீனா ஷோஜனார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது, அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் எம்.சுரேஷ்குமார் ஆஜராகி, சென்னை மாநகராட்சி 9வது மண்டல அதிகாரி பி.எஸ்.ஸ்ரீனிவாசன் சார்பில், நிலை அறிக்கை தாக்கல் செய்தார்.
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சர்ச்சை சீரமைக்கும் நோக்கில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை, சி.எம்.டி.ஏ., - மாநகராட்சி அதிகாரிகள், போலீசார் உதவியுடன், மார்ச் 22ம் தேதி ஆய்வு செய்தோம்.
புதிதாக சர்ச், நுழைவு வாயில், மணிக்கூண்டு மற்றும் சில குடியிருப்புகள், 5,000 சதுர அடியில், அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது. மணிக்கூண்டு கட்டடத்துக்கு, 'சீல்' வைக்கப்பட்டது. எஞ்சிய சட்ட விரோத கட்டுமானங்களை இடிக்க நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், சட்ட விரோத கட்டுமானங்களை, மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், மூன்று மாதத்தில் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
***

