/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
12 பெண் நடத்துனர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு
/
12 பெண் நடத்துனர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு
12 பெண் நடத்துனர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு
12 பெண் நடத்துனர்களுக்கு பணி நிரந்தரம்: ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 13, 2025 11:07 AM
சென்னை: புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, 12 பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தில், பெண் நடத்துனர் பணிக்கு தகுதியானவர் பட்டியலை வழங்கும்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, போக்குவரத்து கழகம் கோரிக்கை வைத்தது. வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தவர்களுக்கு, நேர்முகத் தேர்வு நடத்தி, கடந்த 2010, அக்டோபரில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது.
ஒப்பந்த அடிப்படையில், கடந்த 15 ஆண்டுகளாக நடத்துனர்களாக பணிபுரிந்து வரும் சரஸ்வதி, சாரதா உள்பட 12 பேர், பணி நிரந்தரம் செய்யக் கோரி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பெண் நடத்துனர்கள் 12 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர் எஸ்.லட்சுமி நாராயணன் ஆஜராகினார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சி.குமரப்பன் பிறப்பித்த உத்தரவு:
வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக பரிந்துரைக்கப்பட்டு, முழு தேர்வு நடைமுறைகளை பின்பற்றி, அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட்டு, கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதால், இவர்களுக்கு மூன்று மாதங்களில் பணி நிரந்தரம் வழங்க வேண்டும்.
பணி நிரந்தரம் வழங்க மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் முதல், மனுதாரர்களுக்கான பணிப் பலன்களையும் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.