/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வறுமை போன்ற காரணங்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை; கைதியை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு
/
வறுமை போன்ற காரணங்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை; கைதியை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு
வறுமை போன்ற காரணங்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை; கைதியை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு
வறுமை போன்ற காரணங்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை; கைதியை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 14, 2025 12:11 PM
சென்னை: வறுமை உள்ளிட்ட காரணங்களால் மேல்முறையீடு செய்ய முடிவதில்லை என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கொலை, கொள்ளை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்த கைதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் உள்ள அடகு கடையில் துாங்கிக் கொண்டிருந்த ஊழியரை கொலை செய்து, 4.7 கிலோ தங்க நகைகள் மற்றும் 5.6 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்ததாக, பாலசுப்பிரமணியன் உள்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2002ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த விருத்தாச்சலம் நீதிமன்றம், ஐந்து பேருக்கும் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்நிலையில், அதிக தண்டனை விதிக்க கோரி, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை, ஆயுள் தண்டனையாக அதிகரித்து, சென்னை உயர் நீதிமன்றம், 2010ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, மூன்று குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் தண்டனையை, 10 ஆண்டுகளாக குறைத்து, 2018ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில், தன் கணவருக்கும் தண்டனை குறைப்பு வழங்கி, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள அவரை விடுவிக்க கோரி, பாலசுப்பிரமணியனின் மனைவி இந்திராகாந்தி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, 'வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்ய முடியவில்லை. வழக்கில், ஏற்கனவே மூன்று குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் தண்டனை குறைப்பு வழங்கியுள்ளது.
அதேபோல பாலசுப்பிரமணியனின் தண்டனையும், 10 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் சிறையில் இருப்பதால், வேறு வழக்கில் தேவையில்லை எனில், அவரை உடனே விடுவிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.