/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நந்திவரம் கண்டிகை தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு தாசில்தார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
/
நந்திவரம் கண்டிகை தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு தாசில்தார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
நந்திவரம் கண்டிகை தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு தாசில்தார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
நந்திவரம் கண்டிகை தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு தாசில்தார் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 28, 2025 12:23 AM
சென்னை:'நந்திவரம் கண்டிகை தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக வருவாய் ஆய்வாளரின் அறிக்கையின்படி, வண்டலுார் தாசில்தார் விசாரித்து மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கிராமத்தில் உள்ள கண்டிகை தாங்கல் ஏரி பழமையானது. இந்த ஏரி, அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கும், விவசாயத்துக்கும் பிரதானமாக உள்ளது.
மொத்த பரப்பளவான 11.24 ஏக்கரில், தற்போது 6 ஏக்கர் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி உள்ளது. இவற்றில் 5 ஏக்கர் நீர் நிலைகள்.
நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என, உயர் நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கென, தமிழ்நாடு குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்தவில்லை.
நீர் நிலைகளில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு களை நேரடியாகவோ, ட்ரோன் வாயிலாகவோ கணக்கெடுத்து, சட்டத்துக்கு உட்பட்டு அகற்ற வேண்டும்.
ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்ற கோரி, கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 16 மற்றும் கடந்தாண்டு செப்., 20ல், கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அளித்து உள்ளேன்.
அதை பரிசீலித்து, நந்திவரம் கண்டிகை தாங்கல் ஏரியில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் ஆஜராகி, 'ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அளித்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, அதிகாரிகள் தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை' என்றார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திக் ஜெகன்நாத் ஆஜராகி, 'புகார் மனு தொடர்பாக, வருவாய் ஆய்வாளர் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, கடந்தாண்டு அக்., 10ல் தாசில்தார் கடிதம் அனுப்பி உள்ளார்' என கூறி, அதற்கான ஆவணங்க ளை தாக்கல் செய்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசு தரப்பில் உள்ள ஆவணங்களில், கடந்தாண்டு அக்.,10ல் வருவாய் ஆய்வாளருக்கு, தாசில்தார் அனுப்பிய கடிதத்தில் புகார் மனுவில் கூறப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரியுள்ளார். ஆனால், அதன் பின் என்ன நடந்தது என்பது தெரியவில்லை.
பொதுவாக, அதிகாரிகள் தாங்கள் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தெரிவிக்க வேண்டியதில்லை. மாறாக, விசாரணையின் முடிவு தொடர்பாக, மனுதாரர் தாசில்தார் அலுவலகத்தில் தகவல்களை கேட்டிருக்க வேண்டும்.
எனவே, மனுதாரர் இந்த உத்தரவுடன் தாசில்தார் அலுவலகத்தை அணுக வேண்டும்.
ஆக்கிரமிப்பு விவகாரத்தில், விசாரணை ஏற்கனவே முடிவடையவில்லை என்றால், தாசில்தார் மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து, வருவாய் ஆய்வாளரின் ஆக்கிரமிப்பு கணக்கெடுப்பு அறிக்கையின் அடிப்படையில், சட்டத்துக்கு உட்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.