/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆண்டுக்கு 1 ரூபாய் என குத்தகைக்கு எடுத்து மாதம் ரூ.12 லட்சத்திற்கு சிப்காட் நிலம் உள்வாடகை: தனியார் நிறுவனத்திற்கு ஐகோர்ட் கண்டிப்பு

UPDATED : பிப் 15, 2026 11:46 AM
ADDED : பிப் 15, 2026 05:56 AM

சென்னை: 'சிப்காட்'டுக்கு சொந்தமான தொழிற்பூங்கா நிலத்தை, ஆண்டுக்கு ஒரு ரூபாய் வாடகையில் குத்தகைக்கு எடுத்த தனியார் நிறுவனம், மாதம் 12.41 லட்ச ரூபாய் உள்வாடகைக்கு விட்டது நியாயமற்றது. வசூலித்த கட்டணத்தை சிப்காட் நிறுவனத்திற்கு திருப்பி கொடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில், 17 ஏக்கர் 64 சென்ட் நிலத்தை, ஆண்டுக்கு ஒரு ரூபாய் வாடகையில், 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு, ஏ.எஸ்.கேரியர்ஸ் என்ற நிறுவனம் பெற்றது.
அந்த நிலத்தில் கட்டடங்களையும் கட்டியது. பின், அந்த கட்டடத்தை, வேறொரு நிறுவனத்துக்கு உள்வாடகைக்கு விட்டது. இது, ஒப்பந்த விதிகளுக்கும் முரணானது எனக்கூறி, உள்வாடகை கட்டணத்தை செலுத்தும்படி, ஏ.எஸ்.கேரியர்ஸ் நிறுவனத்துக்கு, சிப்காட் 'நோட்டீஸ்' அனுப்பியது.
இதை எதிர்த்து, ஏ.எஸ்.கேரியர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 'உள்வாடகை கட்டணம் வசூலிக்க, ஒப்பந்தத்தில் எந்த விதிகளும் வகை செய்யவில்லை. எனவே, உள்வாடகை கட்டணம் வசூலிக்க, சிப்காட்டுக்கு அதிகாரம் இல்லை' எனக்கூறி, நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, சிப்காட் மேல் முறையீடு செய்தது. வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, தனியார் நிறுவனம் தரப்பில், 'குத்தகைக்கு பெற்ற நிலத்தை, மூன்றாவது நிறுவனத்துக்கு வழங்கவில்லை. அதில் கட்டப்பட்டு உள்ள கட்டடத்தை மட்டுமே, உள்வாடகைக்கு விட்டு உள்ளோம்' என, தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கட்டடங்களை நிலத்தில் இருந்து பிரிக்க முடியாது. ஒப்பந்தப்படி ஒதுக்கீடு பெற்ற நிலத்தில் உள்ள கட்டடங்களை, மூன்றாம் நிறுவனத்துக்கு உள்வாடகைக்கு விடமுடியாது. ஆண்டுக்கு ஒரு ரூபாய் வாடகைக்கு, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்த நிலத்தில் உள்ள கட்டடத்துக்கு, மாதம், 12 லட்சத்து, 41,764 ரூபாய்க்கு உள்வாடகைக்கு விட்டு விட்டு, அதற்குரிய கட்டணத்தை செலுத்த மறுப்பது நியாயமற்றது.
எனவே, அந்த கட்டணத்தை வசூலிக்க, 'சிப்காட்'டுக்கு அதிகாரம் உள்ளது என்பதால், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.