/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு திண்டாட்டம்! வீடு திரும்ப முடியாமல் அல்லாடிய பயணியர்
/
மின் கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு திண்டாட்டம்! வீடு திரும்ப முடியாமல் அல்லாடிய பயணியர்
மின் கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு திண்டாட்டம்! வீடு திரும்ப முடியாமல் அல்லாடிய பயணியர்
மின் கேபிள் அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு திண்டாட்டம்! வீடு திரும்ப முடியாமல் அல்லாடிய பயணியர்
ADDED : பிப் 15, 2026 05:25 AM

சென்னை: கிண்டி அருகே மின் கேபிள் அறுந்து விழுந்ததால், தாம்பரம் - கடற்கரை தடத்தில் நேற்று மாலை மின்சார ரயில் சேவை முடங்கியது. பணி முடிந்து வீடு திரும்பும் மாலை நேரம் என்பதால், ஆயிரக்கணக்கான பயணியர், ரயில் நிலையங்களில் காத்துக் கிடந்தனர். ஒரு மணிநேரத்திற்கு பின் சேவை துவங்கினாலும், மூன்று மணி நேரத்திற்கு மேல் பரிதவிப்பு தொடர்ந்தது. சென்னை கடற்கரை, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும், 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றில், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால், அலுவலக நேரங்களில் பயணியர் கூட்டம் அலைமோதினாலும், கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க நிர்வாகம் முன் வருவதில்லை. அவ்வப்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, ரயில் சேவை பாதிக்கப்படுவதால், பயணியர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது.
இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி நேற்று மாலை, மின்சார ரயில் சென்று கொண்டிருந்தபோது, கிண்டி அருகே மின் கேபிள் அறுந்து விழுந்தது.
உயர் அழுத்த மின்வினியோகம் பாதிக்கப்பட்டு, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
குறிப்பாக, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி புறப்பட்ட ரயில்கள் மீனம்பாக்கம், பழவந்தாங்கல், பரங்கிமலை, கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம் வரை வரிசையாக அணிவகுத்து நின்றன.
ரயில்வே பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று, உயர் அழுத்த மின்பாதையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ரயில் சேவை முடங்கியதால், கடற்கரை முதல் தாம்பரம் வரை, பல ஆயிரக்கணக்கான மக்கள் ரயில் நிலையங்களில் காத்துக்கிடந்தனர்.
இதற்கிடையில், நெடுநேரமாகியும் ரயில் புறப்படாததால், பயணியர் பலர் பரங்கிமலை, கிண்டி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு படையெடுத்தனர். சிலர் ஆட்டோக்களிலும், மாநகர பேருந்துகளிலும் பயணம் செய்தனர்.
ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள், ஒரு மணிநேரம் போராடி உயர்மட்ட மின்பாதையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர். அதன்பின், மின்சார ரயில் சேவை சீரானது.
மின்பாதையில் பழுதால், நேற்று மாலை 4:50 மணி முதல் 5:50 மணி வரை மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர்.
தொடரும் பாதிப்பு இதுகுறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:
சென்னை புறநகரில் மின்சார ரயில்களின் தேவை பல மடங்கு அதிகரித்து வருகிறது. போதிய மின்சார ரயில்கள் இல்லாததால், அலுவலக நேரங்களில், பயணியர் நெரிசலில் சிக்கி பயணம் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே, அலுவலக நேரங்களில் ரயில் இயக்க இடைவெளி, 5 நிமிடத்தில் இருந்தது, 10 நிமிடங்களாக உயர்த்தப்பட்டு விட்டது.
தற்போது, எழும்பூர் மேம்பாட்டு பணியை காரணமாக காட்டி, கடற்கரை - தாம்பரம் தடத்தில் இரவு நேர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கு, இன்னும் மாற்று ஏற்பாடு செய்யவில்லை. இதனால், இரவு 8:45 மணிக்கு மேல் ரயிலுக்காக, 45 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது, கிண்டியில் மின்கேபிள் அறுந்து விழுந்ததில், ஒரு மணி நேரம் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பயணியருக்கு முறையான தகவல் அறிவிக்காமல், என்ன நடந்தது என தெரியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த அளவுக்கு, ரயில்வே நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.
அலுவலகத்துக்கு சென்று வரும் பயணியர், அன்றாடம் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. புறநகரில் இருந்து மின்சார ரயில் சேவையை நம்பி வரும் லட்சக்கணக்கான பயணியர் நலனிலும், நிர்வாகம் அக்கறை காட்டினால் நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ரயில்வே அலுவலர்கள் கூறியதாவது:
கிண்டி ரயில் நிலையம் அருகில் உயர் அழுத்த மின்ஒயர் திடீரென அறுந்தது. மின்வினியோகம் தடைபட்டதால், மின்சார ரயில்கள் இயக்குவதில் பாதிப்பு ஏற்பட்டது. மாலை 5:50 மணிக்கு பின், மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

