/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர பேருந்துகள் தாமதமாக வந்தால் நடவடிக்கை அதிகாரிகள் உத்தரவால் விழிபிதுங்கும் ஊழியர்கள்
/
மாநகர பேருந்துகள் தாமதமாக வந்தால் நடவடிக்கை அதிகாரிகள் உத்தரவால் விழிபிதுங்கும் ஊழியர்கள்
மாநகர பேருந்துகள் தாமதமாக வந்தால் நடவடிக்கை அதிகாரிகள் உத்தரவால் விழிபிதுங்கும் ஊழியர்கள்
மாநகர பேருந்துகள் தாமதமாக வந்தால் நடவடிக்கை அதிகாரிகள் உத்தரவால் விழிபிதுங்கும் ஊழியர்கள்
ADDED : பிப் 15, 2025 09:05 PM
சென்னை:'மாநகர பேருந்துகள் தாமதமாக வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்ற அதிகாரிகளின் உத்தரவால், ஓட்டுனர், நடத்துனர்கள் திணறி வருகின்றனர். பல இடங்களில் மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்ட பணிகள் நடக்கும் சூழலில், போக்குவரத்து நெரிசலில் பேருந்துகள் சிக்குவதால், என்ன செய்வதென தெரியாமல், அவர்கள் புலம்புகின்றனர்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 'ரன்னிங் டைம்' எனப்படும் வழித்தடங்களில், பேருந்துகள் செல்லும் நேரம், 1972ல் நிர்ணயிக்கப்பட்டது. அப்போது, 1,072 பேருந்துகள் இயக்கப்பட்டன. இது 3,200 ஆக அதிகரித்து விட்டது. அதேபோல், இதர வாகனங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்துவிட்டன.
தவிர, மெட்ரோ ரயில், சாலை மற்றும் மேம்பால பணிகள், கால்வாய் பணிகள் என, பல்வேறு வளர்ச்சி பணிகள், சென்னையில் ஆங்காங்கே நடந்து வருகின்றன. ஆனால், மாநகர பேருந்துகளின் ரன்னிங் நேரம் மட்டும் இன்னும் மாற்றவில்லை.
இதனால், நிர்வாகம் உத்தரவிட்டுள்ள நேரத்துக்குள் பேருந்துகளை இயக்க வேண்டியுள்ளதால், ஓட்டுனர்கள் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர்.
ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப வாயிலாக பேருந்துகள் கண்காணிக்கப்படுகின்றன. போக்குவரத்து நெரிசலால் தான் தாமதம் என தெரிந்தும், ஊழியர்களுக்கு நெருக்கடி அளிப்பதாக, போக்குவரத்து ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திடீர் போராட்டம்
இந்நிலையில், தாமதாக வரும் மாநகர பேருந்துகள் மீது நடவடிக்கை என அதிகாரிகள் சிலர் கூறுவதை கண்டித்து, அயனாவரம் பணிமனையில் ஓட்டுனர், நடத்துனர் நேற்று, திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டு மணி நேரம் பேருந்துகள் சேவை பாதிக்கப் பட்டது. காலையில் பணிக்கு செல்லும் பயணியர் அவதிப்பட்டனர்.
இது குறித்து, போக்குவரத்து ஊழியர்கள் சிலர் கூறியதாவது:
சென்னை, புறநகர் பகுதிகளில் செல்லும் முக்கியமான சாலைகளையொட்டி, மெட்ரோ ரயில் பாதை, மேம்பாலம் உள்ளிட்ட பல பணிகள் நடக்கின்றன. இதனால், சாலையின் அளவு குறுகிவிட்டது. வாகனங்களும் அதிகரித்து விட்டதால், 'பீக் ஹவர்ஸ்'களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதனால், நீண்ட துாரம் செல்லும் மாநகர பேருந்துகளின் தினசரி சர்வீஸ் குறைந்துவிட்டது. இதற்கு, நாங்கள் என்ன செய்ய முடியும்.
சில கிளை மேலாளர்கள் எங்களது நிலையை புரிந்து கொண்டு எந்த வித பிரச்னையும் செய்வதில்லை. ஆனால் சில அதிகாரிகள், ஓட்டுனர், நடத்துனர்களுக்கு நெருக்கடி தருகின்றனர்.
எனவே, இந்த பிரச்னையில் நிர்வாகம் தலையிட்டு, தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, பேருந்துகளின் 'ரன்னிங் டைம்' மாற்றியமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.