/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை ஐ.ஐ.டி., திருவிழா இன்று துவக்கம்
/
சென்னை ஐ.ஐ.டி., திருவிழா இன்று துவக்கம்
ADDED : ஜன 08, 2025 10:04 PM
சென்னை:''சென்னை ஐ.ஐ.டி.,யில், இன்று முதல் 13ம் தேதி வரை நடக்கும் 51வது 'சாரங் 2025' விழாவானது, தென்னந்தியாவின் கலாச்சாரத்தை மையப்படுத்தும் கொண்டாட்டமாக இருக்கும்,'' என, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:
வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கான தனித்துவமான தளத்தை சாரங் வழங்குகிறது.ஐந்து நாள் விழாவில், ப்ரீஸ்டைல் நடனம், புகைப்படம் எடுத்தல், அகபெல்லா, கிராபிக் டிசைனிங், ஸ்டாண்ட் - அப் காமெடி போன்ற பல விதமான கலை வடிவங்கள் நடக்கும்.
புதிதாக, 'நோவா'வின் ஹிப்ஹாப், இண்டி பெஸ்ட் நிகழ்ச்சிகளும், 'மெராக்கி'யின் களரிபயட்டு, பறை, ஒயிலாட்டம் போன்ற, மக்களால் பெரிதும் அறியப்படாத கலைவடிவங்களை பிரபலப்படுத்தும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாரங்கின் 'வேர்ல்ட் பெஸ்ட்' எனப்படும், சர்வதேச இசைத் திருவிழாவில், 10,11,12ம் தேதிகளில், பகல் நேர இலவச இசை நிகழ்ச்சிகள் நடக்கும். இதில், ஜப்பானிய இசை, இத்தாலி மெட்டல் பேண்ட், போலந்து நாட்டின் அக்கார்டு வாத்தியக் குழுவினர் உள்ளிட்ட பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.
மற்றொரு சிறந்த நிகழ்வாக, 'ஸ்பாட்லைட் லெக்ட்சர் சீரிஸ்' என்ற பகுதியில், கே.எஸ்.சித்ரா, நிஹாரிகா, சாண்டி மாஸ்டர், லிடியன் நாதஸ்வரம், கிஷன் தாஸ் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
கலை, கலாசாரத்தின் வாயிலாக, மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்தும் நோக்கமாக, சென்னை செயின்ட் லுாயிஸ் காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோருக்கான கல்விக்கு உதவும் பொருட்களை சாரங் குழுவினர் வழங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பில், சென்னை ஐ.ஐ.டி., டீன் சத்தியநாராயணன், ஆசிரியர் ஆலோசகர் சுஷாந்தா பாணிக்ரஹி, கலாச்சார பிரிவு செயலர் ஆரோமல் கேசவ், பாவிகா ராகேஷ், ஆர்யா தாவோ ஆகியோர் உடன் இருந்தனர்.

