/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீர்நிலைகளில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' அதிகரிப்பதால் சூழும் பேராபத்து எச்சரிக்கிறார் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்
/
நீர்நிலைகளில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' அதிகரிப்பதால் சூழும் பேராபத்து எச்சரிக்கிறார் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்
நீர்நிலைகளில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' அதிகரிப்பதால் சூழும் பேராபத்து எச்சரிக்கிறார் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்
நீர்நிலைகளில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' அதிகரிப்பதால் சூழும் பேராபத்து எச்சரிக்கிறார் சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர்
ADDED : மார் 02, 2024 12:02 AM

சென்னை, ''கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில், 'மைக்ரோ பிளாஸ்டிக்' கலப்பு அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுச்சூழலுக்கும் நமக்கும் பேராபத்து,'' என, ஐ.ஐ.டி., பேராசிரியர் ரவிகிருஷ்ணா தெரிவித்தார்.
சென்னை, ஐ.ஐ.டி.,யும், ஜப்பான், பிராண்டியர் லேப் நிறுவனமும் இணைந்து, 'மைக்ரோ பிளாஸ்டிக்' குறித்த இரண்டு நாள் தேசிய பயிற்சி பட்டறை நடத்துகின்றன.
இந்த பயிற்சி பட்டறையை, ஐ.ஐ.டி.,யின் ரசாயன பொறியாளர் பிரிவு துறைத் தலைவர் ரவிகிருஷ்ணா, தரமணி ஐ.ஐ.டி.எம்., ஆராய்ச்சி பூங்காவில் நேற்று துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
நாம் துாக்கி எறியும் கழிவுகளில் இருந்து உருவாகும் 'மைக்ரோ பிளாஸ்டிக்' எனும் நுண்துகள்கள் மண், நீர், காற்றில் கலந்து சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாம் தினமும் உண்ணும், உப்பு உள்ளிட்ட உணவிலும் 'மைக்ரோ பிளாஸ்டிக்' இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வளவு ஏன், ஒரு சில ரத்தத்திலும் அது கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இது நமக்கு பேராபத்தானதாகும்.
குறிப்பாக சமுத்திரம் உள்ளிட்ட நீர்நிலைகளில், அதிகம் கலந்துள்ளதாக ஆய்வில் கூறப்படுகிறது. மண், நீர் மாதிரி எடுத்து ஆய்வு செய்யும்போது, எந்த விதமான பிளாஸ்டிக்குகள் நுண் துகள்கள் உள்ளன என்பது கண்டறியப்படுகிறது.
இதுகுறித்த ஆராய்ச்சி தான், தற்போது இந்திய அளவில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை, ஐ.ஐ.டி., ரசாயன துறை பேராசிரியர் வினு கூறியதாவது: ''கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளில், 80 சதவீதம் கரையோரப் பகுதியில் இருந்து செல்கிறது. அதை உண்ணும் மீன்களை, நாம் உண்பதால் நமக்கும் ஆபத்தாக மாறுகிறது.
இது போன்ற பல்வேறு காரணிகள் குறித்து கலந்தாலோசனை நடத்தவே, இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜப்பான், 'பிராண்டியர் லேப்' நிறுவனத்தைச் சேர்ந்த இச்சி வட்டானபே, கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளரும் ஜப்பான், பிராண்டியர் லேப் நிறுவனத்தைச் சேர்ந்தவருமான கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த பயிற்சி பட்டறையில், பல்கலை ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், ஆய்வக உபகரண உற்பத்தியாளர்கள் என, 90க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். 30க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன.

