/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீபெரும்புதுாரில் தொழிற்சாலைகள் வழங்கிய ரூ.26 கோடி நிதியில்... குளறுபடி!:தனியாக வங்கி கணக்கு துவங்கி வரவு -- செலவு பார்த்த அதிகாரிகள்
/
ஸ்ரீபெரும்புதுாரில் தொழிற்சாலைகள் வழங்கிய ரூ.26 கோடி நிதியில்... குளறுபடி!:தனியாக வங்கி கணக்கு துவங்கி வரவு -- செலவு பார்த்த அதிகாரிகள்
ஸ்ரீபெரும்புதுாரில் தொழிற்சாலைகள் வழங்கிய ரூ.26 கோடி நிதியில்... குளறுபடி!:தனியாக வங்கி கணக்கு துவங்கி வரவு -- செலவு பார்த்த அதிகாரிகள்
ஸ்ரீபெரும்புதுாரில் தொழிற்சாலைகள் வழங்கிய ரூ.26 கோடி நிதியில்... குளறுபடி!:தனியாக வங்கி கணக்கு துவங்கி வரவு -- செலவு பார்த்த அதிகாரிகள்
ADDED : அக் 30, 2024 10:00 PM

காஞ்சிபுரம்:தொழிற்சாலைகள் ஊராட்சிகளுக்கு உரிமக் கட்டணமாக செலுத்திய, 26.3 கோடி ரூபாயை, பி.டி.ஓ., அலுவலக பொது நிதியின் கீழ் வரவு வைக்காமல், தனி கணக்கு துவக்கி, வெளிப்படையின்றி வரவு - செலவு செய்ததன் வாயிலாக, அதிகாரிகள் குளறுபடி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து, மாநில கணக்காயர் அலுவலகத்தில் இருந்து வந்துள்ள தணிக்கை குழுவினர், நிதி குளறுபடி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அதிக தொழிற்சாலைகள் கொண்டதாக குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், வாலாஜாபாத் ஆகிய ஒன்றியங்கள் உள்ளன. குறிப்பாக, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில்தான் அதிக தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் உள்ள 58 ஊராட்சிகளில், 31 ஊராட்சிகளில் தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த தொழிற்சாலைகள், அந்தந்த ஊராட்சிகளுக்கு, பி.டி.ஓ., அலுவலகங்கள் வாயிலாக உரிம கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வகையில், உரிம கட்டணமாக பல கோடி ரூபாய் வசூலாகும். இந்த நிதியை பயன்படுத்தி, அந்தந்த ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.
அவ்வாறு, தொழிற்சாலைகள் செலுத்தும் கோடிக்கணக்கான ரூபாய் உரிம கட்டணங்களை, ஸ்ரீபெரும்புதுார் பி.டி.ஓ., அலுவலகத்தின் பொது நிதியின் கீழ் வரவு வைக்க வேண்டும்.
அவ்வாறு செய்யாமல், 2017- - 18ம் ஆண்டு முதல், இந்தியன் வங்கியில் தனி கணக்கு துவங்கிய அதிகாரிகள், அந்த கணக்கில் வரவு வைத்து செலவிட்டு வந்துள்ளனர்.
தனி வங்கி கணக்கு துவங்கப்பட்டு, அதில் வரவு வைக்கப்படுவதால், அந்த நிதியில் செலவாகும் நிதி குறித்த விபரங்கள் வெளிப்படையாக தெரியாமல் இருந்தது.
கடந்த ஆண்டுகளில் பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள், இந்த நிதியை பொது நிதியின் கீழ் மாற்றம் செய்ய முயற்சிக்காததால், அப்படியே தனி கணக்கிலேயே தொடர்கிறது.
மேலும், இந்த வங்கி கணக்கு பற்றிய விபரங்கள் தணிக்கை நடவடிக்கைளில் வருவதில்லை என்பதால், தொழிற்சாலைகள் உரிமக் கட்டணமாக செலுத்தும் கோடிக்கணக்கான ரூபாயில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்தது.
கடந்த 2017- முதல் 2024ம் ஆண்டு வரை, 26.3 கோடி ரூபாய் உரிம கட்டணமாக, இந்த தனி வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. தனி வங்கி கணக்கில் உள்ள இந்த தொகையை, பொது நிதியின் கீழ் மாற்றம் செய்யும்படி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, சமீபத்தில் இந்தியன் வங்கிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், அந்த நடவடிக்கையும் முழுமை பெறாததால், அந்த நிதியும் பொது கணக்கிற்கு மாறாமலேயே உள்ளது.
இதற்கிடையே, கடந்த செப்டம்பரில் நடந்த ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்ரீபெரும்புதுார் காங்.,- - எம்.எல்.ஏ., செல்வபெருந்தகை, தொழிற்சாலைகள் செலுத்திய உரிம கட்டணம் பற்றி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதால், இந்த விவகாரம் மேலும் பெரிதானது.
ஏற்கனவே, தனி கணக்கில் வைத்திருக்கும், 26 கோடி ரூபாயில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், எம்.எல்.ஏ.,வும் இதுபற்றி கேள்வி எழுப்பியதால், நிதியை பொது கணக்கிற்கு மாற்ற வேண்டிய நெருக்கடி, ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர், திட்ட இயக்குனர் போன்ற உயரதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் உள்ள மாநில கணக்காயர் அலுவலகத்தில் இருந்து, தணிக்கை குழுவினர், ஸ்ரீபெரும்புதுார் பி.டி.ஓ., அலுவலகம் சென்றுள்ளனர். குழுவில், மூத்த தணிக்கை அதிகாரி அன்புமலர், உதவி தணிக்கை அதிகாரிகள் ஸ்ரீஜித், சத்யம்ராஜ், செந்தில்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர், ஸ்ரீபெரும்புதுார் பி.டி.ஓ., அலுவலகத்தில், ஒரு வாரமாக தணிக்கை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பி.டி.ஓ., அலுவலக செயல்பாடுகள் மற்றும் தனியாக நிர்வகித்து வரும், 26.3 கோடி ரூபாய் நிதி விபரம் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனர்.
இதனால், தொழிற்சாலைகள் செலுத்தி வரும் உரிமக்கட்டண விபரங்கள் மற்றும் குளறுபடிகள் அனைத்தும் வெளியே வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'தொழிற்சாலை உரிம கட்டணத்தை, பொது நிதிக்கு மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதில் எந்த குளறுபடியும் இல்லை. ஊரக வளர்ச்சித் துறையில் தணிக்கை செய்வது வழக்கமான பணி' என்றார்.