/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தி.நகர் பெருமாள் கோவிலில் ராமர் சிலை திறப்பு
/
தி.நகர் பெருமாள் கோவிலில் ராமர் சிலை திறப்பு
ADDED : ஜன 04, 2024 12:17 AM

சென்னை, அயோத்தியில் ராமர் பிரதிஷ்டை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பெருமாள் கோவிலில் இன்று முதல் வரும் 26ம் தேதி வரை பக்தி இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இதற்கான துவக்க விழா மற்றும், பத்தரை அடி உயர ராமபிரான் சிலை திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
இதில், ஸ்ரீராமபிரான் சிலையை ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறங்காவலர் உறுப்பினரும், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான பராசரன் திறந்து வைத்தார்.
விஸ்வ இந்து வித்யா கேந்திரா தலைவர் வேதாந்தம், உபன்யாகர் வேளுகுடி கிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
விழாவிற்கு தலைமை தாங்கிய டி.டி.டி., தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் பேசியதாவது:
ராமபிரான் பிறந்த இடத்தில் கோவில் அமைத்து சம்ரோக்ஷணம் நடக்க உள்ளது. அந்த கோவில் அமைவதற்கு, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பராசரன் பல ஆண்டுகள் போராடி ஹிந்துக்களின் கனவை நினைவாக்கிஉள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் அமைத்த பிரதமர் மோடி மற்றும் அதற்கான போராடிய அனைவரையும் நினைவு கூர்வோம்.
பீடத்துடன் கூடிய பத்தரை அடி உயர ராமபிரான் சிலை பைபர் வாயிலாக செய்யப்பட்டது. வரும் 26ம் தேதிவரை பக்தர்கள் தரிசிக்கலாம். தினமும் மாலை 6:30 மணி முதல் 7:30 மணிவரை கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேதாந்தம் பேசுகையில், ''ராமஜென்ம பூமி, 500 ஆண்டுகள் போராட்டம். ராமாயணத்தில் கல் மீது ராமாபிரான் பாதம் பட்டதும் அகல்யாவிற்கு விமோசனம் கிடைக்கிறது.
அதேபோல, ராமரின் பார்வை பராசரன் மீது பட்டதும் ராமஜென்ம பூமிக்கு விமோசனம் கிடைத்தது. அயோத்தியில் நடக்கும் ராமர் பிரதிஷ்டைக்காக இங்கும் விழா எடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது,'' என்றார்.
நிகழ்ச்சியில் தமிழக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கோபால்ஜி, டி.டி.டி., அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.