/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குன்றத்துார் மலையில் வீடுகள் கட்டுவது அதிகரிப்பு; ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுலா தலமாக்க எதிர்பார்ப்பு
/
குன்றத்துார் மலையில் வீடுகள் கட்டுவது அதிகரிப்பு; ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுலா தலமாக்க எதிர்பார்ப்பு
குன்றத்துார் மலையில் வீடுகள் கட்டுவது அதிகரிப்பு; ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுலா தலமாக்க எதிர்பார்ப்பு
குன்றத்துார் மலையில் வீடுகள் கட்டுவது அதிகரிப்பு; ஆக்கிரமிப்பை அகற்றி சுற்றுலா தலமாக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 23, 2024 06:32 AM

குன்றத்துார் : குன்றத்துார் முருகன் கோவில் அமைந்துள்ள மலையை ஆக்கிரமித்து, வீடுகள் கட்டுவது அதிகரித்து வருகிறது. பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த நினைவிடங்கள் அங்குள்ள நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றி தொல்லியல் - ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னை அடுத்த குன்றத்துார் மலை மீது, பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில், வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் இதுதான்.
ஈமச்சின்னங்கள்
இதன் மலையடிவாரத்தில், பெருங்கற்கால மக்களின் ஈமச்சின்னங்கள், வாழ்விடங்கள் காணப்படுகின்றன. மத்திய தொல்லியல் துறையினர் 1955ம் ஆண்டில், குன்றத்துார் மலையில் அகழாய்வு மேற்கொண்ட போது, இதுகுறித்து அறிய முடிந்தது.
அப்போது, இந்த மலையடிவாரத்தைச் சுற்றி பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய மட்கலன்களான தட்டு, தாங்கி, தாழி போன்றவற்றை கண்டெடுத்தனர்.
அதேபோல் இரும்பால் செய்யப்பட்ட கத்தி, வளையல்கள், கோடரி, ஈட்டி, ஆணி, குதிரை லாடங்கள், குறுவாள், உளி போன்ற பொருட்களை எடுத்தனர்.
தவிர, உறை கிணறு, அரிய கல்மணிகள், செப்பு நாணயங்கள், சுடுமண் பொம்மைகள் மற்றும் முத்திரைகளும் அகழாய்வில் கிடைத்துள்ளன.
மேலும் ஈமப்பேழை, சரளைக் கற்களால் கட்டப்பட்ட சுவர் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.இதன் வாயிலாக, கி.பி., 1,000 - கி.மு., 200 ஆண்டுகள் காலகட்டமான பெருங்கற்காலத்தில், குன்றத்துார் மலையில் மக்கள் வாழ்ந்தது, அகழாய்வு ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், பூண்டி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த மலையை, தொல்லியல் துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், மலை மீது ஆக்கிரமிப்பு நடந்து வருகிறது.
இதனால், பெருங்கற்கால மனிதர்கள் வாழ்ந்த நினைவிடம் என்ற அடையாளத்தையே, இந்த மலை முற்றிலும் இழந்து வருகிறது. மலையைச் சுற்றி ஆக்கிரமித்து, வீடுகள் கட்டப்பட்டு கபளீகரம் செய்யப்படுகின்றன.
முகம் சுளிப்பு
தற்போது 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அமைந்துள்ளன.
அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், மலையின் மேற்பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாகவும், மலையடிவாரத்தில் அதிக அளவிலும், ஆக்கிரமிப்பு வீடுகள் அதிகரித்து வருகின்றன.
வீடு கட்டியுள்ளோருக்கு வசதியாக சாலை, மின்சாரம், குடிநீர் வசதிகளை, குன்றத்துார் நகராட்சி நிர்வாகத்தினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு மட்டுமின்றி, மலை மீது சமூக விரோத செயல்களும் அதிகம் நடக்கின்றன. இதனால், குன்றத்துார் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முகம் சுளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அகற்றி, பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த நினைவிடங்களை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய, மாநில தொல்லியல் துறையினர், 20க்கும் மேற்பட்ட அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு, பழங்கால மனிதர்களின் வாழ்விடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை கண்டுபிடித்துள்ளனர்.
அகழாய்வு நடந்த இடங்கள், தற்போது கடுமையான ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. தொல்லியல் துறையினர் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்கான போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு அமைத்து, வருவாய் துறை வாயிலாக அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
அளவீடு செய்தால் தெரியும்
குன்றத்துார் மலை மட்டுமின்றி, பல இடங்களில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. நிளத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற, வருவாய் துறையிடம் மனு கொடுத்து பரிந்துரைத்தும், அளவீடு பணிகள் பல இடங்களில் மேற்கொள்ளப்படவில்லை. குன்றத்துார் மலையில் வருவாய் துறை வாயிலாக அளவீடு செய்தால் தான், ஆக்கிரமிப்பு எண்ணிக்கை குறித்து முழுமையாக தெரிய வரும்.
- தொல்லியல் துறை அலுவலர்