/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சந்தைக்கு வரத்து அதிகரிப்பு வெங்காயம், பூண்டு விலை சரிவு
/
சந்தைக்கு வரத்து அதிகரிப்பு வெங்காயம், பூண்டு விலை சரிவு
சந்தைக்கு வரத்து அதிகரிப்பு வெங்காயம், பூண்டு விலை சரிவு
சந்தைக்கு வரத்து அதிகரிப்பு வெங்காயம், பூண்டு விலை சரிவு
ADDED : ஜன 19, 2025 10:02 PM

சென்னை:சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால், உச்சத்தில் இருந்த வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய் விலை மெல்ல சரிய துவங்கி உள்ளது.
மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், பெரிய வெங்காயம்; மத்தியபிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், பூண்டு அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களில் இருந்து சில மாதங்களாக, தமிழகத்திற்கு வரத்து குறைவாக இருந்தது.
இதனால், அவற்றின் விலை உச்சத்தை தொட்டது. பூண்டு கிலோ 350 முதல் 450 ரூபாய் வரை விற்கப்பட்டது. சீனாவில் இருந்து இறக்குமதியான பூண்டு, கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பண்டிகை காலம் முடிந்த நிலையில், கிடங்குகளில் இருந்த பூண்டுக்கள், சந்தைக்கு அதிகம் வரத் துவங்கி உள்ளன. புதிய அறுவடையும் விரைவில் துவங்க உள்ளதால், பூண்டு விலை குறைந்து வருகிறது. கோயம்பேடு மொத்த விற்பனை மளிகை சந்தையில், கிலோ பூண்டு 150 முதல் 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கர்நாடகா மற்றும் ஆந்திராவில் புதிய வெங்காயம் அறுவடை துவங்கி உள்ளதால், கிலோ 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் விலை, படிப்படியாக குறைந்து வருகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையில், ஒரு கிலோ வெங்காயம், 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழகத்தில் திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், முருங்கைக்காய் அறுவடை துவங்கி உள்ளது. ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்தும் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், கிலோ முருங்கைக்காய் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
பலவகை காய்கறிகள் அறுவடை துவங்கி உள்ளதால், வரும் நாட்களில் வரத்து அதிகரித்து, விலை மேலும் குறையும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
***