ADDED : செப் 16, 2026 06:53 PM
சென்னை: வியாபாரியை மிரட்டி, 40 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், ஜாமின் கோரி யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் முகமது புஹாரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அகில்குமார், 35; வியாபாரி. இவரிடம் இன்ஸ்பெக்டர் புஹாரி ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கிருஷ்ணன் பயன்படுத்திய மொபைல் போன் எண், அகில்குமார் பெயரில் இருந்ததாக கூறி’ பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இரண்டு ஆண்டுகளில், 40 லட்சம் ரூபாய் வரை பெற்றுள்ளார்.
மேலும், கடந்த ஆக., 3ம் தேதி கூடுதலாக 5 லட்சம் ரூபாய் தரும்படி கேட்டுள்ளார். பணம் தரவில்லை என்றால் போதைப் பொருள் வழக்கில் கைது செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இது குறித்து அகில்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், இன்ஸ்., புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளனர். வழக்கில் இருந்து ஜாமின் கோரி இன்ஸ்., புஹாரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில், ‘வழக்கு விசாரணை முதற்கட்ட நிலையில் இருப்பதால், குற்றம் சாட்டப்பட்டவரை ஜாமினில் விடுதலை செய்தால், அவர் ஆதாரங்களை கலைக்க நேரிடும். எனவே, ஜாமின் வழங்க கூடாது’ என, வாதிட்டார்.
இதை பரிசீலித்த நீதிபதி, இன்ஸ்., முகமது புஹாரியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
