/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னை பல்கலையின் தொல்லியல் துறை... மூடப்படுகிறதா?:படிப்பு அங்கீகாரத்திலும் தொடருது குழப்பம்
/
சென்னை பல்கலையின் தொல்லியல் துறை... மூடப்படுகிறதா?:படிப்பு அங்கீகாரத்திலும் தொடருது குழப்பம்
சென்னை பல்கலையின் தொல்லியல் துறை... மூடப்படுகிறதா?:படிப்பு அங்கீகாரத்திலும் தொடருது குழப்பம்
சென்னை பல்கலையின் தொல்லியல் துறை... மூடப்படுகிறதா?:படிப்பு அங்கீகாரத்திலும் தொடருது குழப்பம்
ADDED : நவ 09, 2025 12:41 AM

நிரந்தர பேராசிரியர்கள் இல்லை; வரலாறு பாடத்துக்கு தொல்லியல் படிப்பு இணையானது இல்லை என்பது உள்ளிட்ட சிக்கல்களால், சென்னை பல்கலையின் பாரம்பரியம் மிக்க பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை மூடப்படும் அபாயத்தில் உள்ளது. சென்னை பல்கலையில், 1960ல் துவக்கப்பட்டது பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை. இதுவரை, 800க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரிகளையும், 130 எம்.பில்., பட்டதாரிகளையும், 60க்கும் மேற்பட்ட டாக்டர் பட்ட முனைவர்களையும் உருவாக்கி உள்ளது.
டி.வி.மகாலிங்கம், பி.கே.குருராஜாராவ், சி.கிருஷ்ணமூர்த்தி, கே.வி.ராமன், ஆர்.செண்பகலட்சுமி, ஏ.ஏகாம்பரநாதன், எஸ்.குருமூர்த்தி, ப.சண்முகம், கா.ராஜன், செல்வகுமார் உள்ளிட்ட புகழ்பெற்ற பேராசிரியர்கள், இந்த துறையில் பணியாற்றி உள்ளனர்.
இங்கு படித்த அமர்நாத் ராமகிருஷ்ணன், அருண்ராஜ், அறவாழி உள்ளிட்டோர், மத்திய தொல்லியல் துறையின் சிறந்த தொல்லியல் அதிகாரிகளாக வலம் வருகின்றனர்.
புதிய கண்டுபிடிப்பு
இந்த துறையில் படித்த மாணவர்கள் தங்களின் கள ஆய்வு வாயிலாக, அப்புக்கல்லு, கல்லேரிமலை, மல்லப்பாடி, அதியமான்கோட்டை உள்ளிட்ட இடங்களை கண்டுபிடித்தனர். அந்த இடங்களில், சென்னை பல்கலை அகழாய்வுகளையும் செய்துள்ளது.
மேலும் காஞ்சிபுரம், திருவேற்காடு, திருக்காம்புலியூர், உறையூர், அழகரை, திருவக்கரை, திருவாமாத்துார், பாலுார் உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களை அகழாய்வு செய்து, பல்வேறு தகவல்களையும் வெளிப்படுத்தினர்.
அதுமட்டுமின்றி, இங்கு முதுநிலை பட்டப்படிப்பு முடித்தோரில் பலர், பல்வேறு கல்லுாரிகளில் வரலாற்று துறை பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த துறையில் ஒரு பேராசிரியர், மூன்று இணை பேராசிரியர்கள், இரண்டு உதவி பேராசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இடத்தில், ஒரு பேராசிரியர் மட்டுமே இருக்கிறார். அவரும் அடுத்தாண்டு ஓய்வு பெற உள்ளார். அதனால், துறையை நடத்த யாரும் இல்லை.
இது ஒருபுறம் இருக்க, இங்கு படித்தோர், வரலாற்று துறை பேராசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த நிலையில், 'இந்த படிப்பு, வரலாற்று துறை படிப்புக்கு இணையானது இல்லை' என, தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் கூறியுள்ளதால், அவர்களின் விண்ணப்பங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நிராகரித்துள்ளது.
தகுதி இல்லையா?
இதனால், ஆசிரியர் தேர்வுக்காக தங்களை தயார் செய்து கொண்டிருந்தோர், மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
இதுகுறித்து, தேர்வுக்கு தயாரானோர் கூறியதாவது:
அரசு கல்லுாரிகளில், 70 வரலாற்று துறை உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எம்.பில்., - பிஎச்.டி., - நெட், - ஸ்லெட் உள்ளிட்ட தேர்வுகளை முடித்த நாங்கள் விண்ணப்பித்தோம்; விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
இத்தனை ஆண்டுகள் வரை, வரலாற்று பாடத்திற்கு இணையான கல்வியாக இருந்த இந்த துறையை, கடந்தாண்டு மார்ச்சில், தமிழக அரசு நீக்கி உள்ளது. தஞ்சை தமிழ் பல்கலையிலும், சென்னை பல்கலையிலும் மட்டும் தான், தொல்லியல் மற்றும் வரலாறு துறை உள்ளது.
அதில் படித்தவர்கள் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின்படியே, வரலாற்று நுால்கள் எழுதப்பட்டுள்ளன. வரலாறை எழுதிய துறையினருக்கு, வரலாறு கற்பிக்க தகுதி இல்லையா?
தமிழகத்தில் தான் அதிக இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் வாயிலாகவே வரலாற்று தகவல்கள் திருத்தப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு ஆசிரியர் வேலைவாய்ப்பு கிடையாது என்பதை எப்படி ஏற்க முடியும்?
முரண்பாடு அதாவது, அகழாய்வுகள் செய்வோம்; ஆனால், அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல மாட்டோம் என்பதாகத் தானே அரசின் நிலைப்பாடு உள்ளது.
சென்னை பல்கலையில் அகழாய்வு, நாணயவியல், கல்வெட்டு, பாரம்பரிய சின்னங்கள் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் செய்யும் தொல்லியல் துறையினருக்கு, ஆசிரியராகும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
அதேநேரம், தமிழ் பல்கலையில் படித்தோருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது, முரணாக உள்ளது.
தமிழக வரலாற்றின் மீதும், பண்பாட்டின் மீதும் உண்மையிலேயே அக்கறை கொள்ளும் அரசாக இருந்தால், கல்லுாரிகளின் வரலாறு பாடத்தில், தொல்லியல் குறித்த பாடங்களை சேர்க்க வேண்டும்.
எங்களை போன்றோரை பணியில் சேர்த்து, இந்த முரண்பாட்டை நீக்க வேண்டும். அப்போதுதான், சென்னை பல்கலையில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் முதுநிலை படிப்புகளை முடித்து வெளியேறும் நுாற்றுக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

