/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் இருவர் கைது
/
ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் இருவர் கைது
ADDED : நவ 09, 2025 03:31 AM
சென்னை: மெரினாவில், ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த கல்லுாரி மாணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
மெரினா லுாப் சாலை நொச்சிக்குப்பத்தில், நேற்று முன்தினம் அதிகாலை வழக்கம்போல மக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடற்கரை மணற்பரப்பில் ஆண் நபர் ஒருவர் தலையில் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்து, மெரினா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அந்தோணி என்பது தெரிய வந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, அந்தோணி உயிரிழந்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் ஆகாஷ், 21 என்பவரும், அவரது நண்பரான டுமிங் குப்பத்தைச் சேர்ந்த 'ஜிம் டிரைனர்' ஜோஷ்வா, 25 என்பவரும், படகு துடுப்பால் தாக்கியது தெரியவந்தது.
இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தன் தாயுடன் பழகுவதை கைவிடும்படி அந்தோணியிடம் பலமுறை கூறினேன். அதேபோல், அந்தோணியிடம் பழகுவதை கைவிடும்படி தாயிடமும் கூறினேன். இருவரும் பழக்கவழக்கத்தை கைவிடாததால், ஆத்திரத்தில் படகு துடுப்பால் தாக்கியதாக ஆகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். பின் இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

