/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெரினா கடற்கரை செல்ல கட்டணமா? இலவசம் என மாநகராட்சி திட்டவட்டம்!
/
மெரினா கடற்கரை செல்ல கட்டணமா? இலவசம் என மாநகராட்சி திட்டவட்டம்!
மெரினா கடற்கரை செல்ல கட்டணமா? இலவசம் என மாநகராட்சி திட்டவட்டம்!
மெரினா கடற்கரை செல்ல கட்டணமா? இலவசம் என மாநகராட்சி திட்டவட்டம்!
ADDED : ஏப் 16, 2025 12:12 AM

சென்னை, ''மெரினாவில் அமைக்கப்படும் நீலக்கொடி கடற்கரை பகுதிக்கு, பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவர்,'' என, மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் கூறினார்.
உலகின் மிக நீளமான கடற்கரையில், இரண்டாவது இடமும், இந்தியாவில் முதலிடமும் சென்னை மெரினா கடற்கரை பெற்றுள்ளது. இதுபோன்ற கடற்கரைகளுக்கு, டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை 'நீலக்கொடி' சான்றிதழ் வழங்குகிறது.
இந்த நீலக்கொடி அங்கீகாரம் பெறும் கடற்கரை பகுதிகளுக்கு, வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகளவில் வருவர் என்பதால், பெரும்பாலான நாடுகள் நீலக்கொடி சான்றிதழை பெற முயற்சி செய்து வருகின்றன.
தமிழகத்தில், கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரைக்கும் நீலக்கொடி சான்றிதழ் பெற, சுற்றுச்சூழல் துறை, ஆறு கோடி ரூபாயை மாநகராட்சிக்கு வழங்கியது.
அதன்படி, மெரினா நீச்சல் குளம் அருகே, 50 ஏக்கர் பரப்பளவில், நீலக்கொடி கடற்கரையை அமைக்கும் பணியை மாநகராட்சி துவக்கி உள்ளது. இந்த பரப்பில், கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாது. அதேபோல், பிளாஸ்டிக், உணவு பொருட்கள் உள்ளிட்டவை கொண்டு வர முடியாது.
அதேநேரம், குடும்பத்தினருடன் கடற்கரை அழகை கண்டு களிக்கும் வகையில், அமரும் இருக்கைகள், கொட்டகை, சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்டவை அமைக்கப்படும்.
மேலும், இரவு நேரங்களிலும் கடற்கரையை ரசிக்கும் வகையில், வண்ண விளக்குகள், பாதுகாப்பு ஏற்பாடு, சுகாதாரமான மணற்பரப்பு உள்ளிட்ட, 33 காரணிகளுடன் நீலக்கொடி கடற்கரை அம்சங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறப்பட்ட பின், கோவளம் கடற்கரையை போல, சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு நபருக்கு, 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதை மாநகராட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது:
மெரினாவில் நீலக்கொடி கடற்கரையை பொதுமக்கள் குடும்பத்தினருடன் கண்டு ரசிக்கும் வகையில், பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நீலக்கொடி கடற்கரை பரப்பில், 15 பணியாளர்கள் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அவர்கள், குப்பை, சுகாதாரமான குடிநீர், கழிப்பறை சுகாதாரம் உள்ளிட்ட பணிகளை கண்காணிப்பர். இதற்கான செலவை, மாநகராட்சியே ஏற்று கொள்ளும். நீலக்கொடி கடற்கரைக்கு வரும் மக்களிடம் எவ்வித கட்டணமும் மாநகராட்சி வசூலிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.