/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் திறந்து வைத்து 7 மாதம் ஆச்சு இன்னும் பயன்பாட்டிற்கு வராத விடுதி
/
முதல்வர் திறந்து வைத்து 7 மாதம் ஆச்சு இன்னும் பயன்பாட்டிற்கு வராத விடுதி
முதல்வர் திறந்து வைத்து 7 மாதம் ஆச்சு இன்னும் பயன்பாட்டிற்கு வராத விடுதி
முதல்வர் திறந்து வைத்து 7 மாதம் ஆச்சு இன்னும் பயன்பாட்டிற்கு வராத விடுதி
ADDED : டிச 09, 2025 05:53 AM

சென்னை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து ஏழு மாதங்களாகியும், சென்னை பல்கலை மாணவர் விடுதி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
நுாற்றாண்டுகள் பழமை வாய்ந்த சென்னை பல்கலையில், தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவ - மாணவியரின் நலனுக்காக, பல்கலையின் மாணவர் விடுதிகள், தரமணி வளாகம் மற்றும் பல்கலைக்கு சொந்தமான இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
சென்னை பல்கலை வளாகத்தில், முதுநிலை படிக்கும் மாணவர்கள், தரமணி விடுதியில் இருந்து, நாள்தோறும் மின்சார ரயில்களில் வந்து செல்கின்றனர்.
இதை கருத்தில் வைத்து, காமராஜர் சாலை அருகே, தமிழக அரசு மற்றும் சென்னை பல்கலையின் நிதி பங்களிப்பில், 55 கோடி ரூபாயில், மூன்று தளங்களுடன் கூடிய, முதுநிலை மாணவர் விடுதி கட்டப்பட்டது.
இந்த விடுதியை, கடந்த மே 20ல், முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். விடுதி திறக்கப்பட்டு, ஏழு மாதங்களாகியும், இன்றளவும் அது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை.
போதிய பராமரிப்பு இல்லாததால், விடுதி வளாகமே குப்பை சூழ்ந்து காணப்படுகிறது. விடுதிக்கு தேவையான தளவாட பொருட்கள் கொள்முதலில் நீடிக்கும் தாமதமே, விடுதி பூட்டப்பட்டு இருப்பதற்கு காரணம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து, உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை பல்கலை முதுநிலை மாணவர் விடுதி, அரசு மற்றும் பல்கலை நிதி பங்களிப்புடன் கட்டப்பட்டது. விடுதிக்கு தேவையான தளவாட பொருட்களை, சென்னை பல்கலை கொள்முதல் செய்ய வேண்டும். அதன்பிறகே மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படும்.
விடுதிக்கான சமையலறை பயன்பாட்டிற்கான பொருட்கள் வாங்க, 10 லட்சம் ரூபாய் தேவை. இதற்கான நிதியை பல்கலை விடுவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல்கலை ஒத்துழைப்புடன், 2026 - 27 கல்வியாண்டு துவங்கும் முன், மாணவர் விடுதியை பயன்பாட்டிற்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

