/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆசிய டிரையத்லான் போட்டியில் உற்சாகம் இத்தாலி, இந்தோனேஷியா நாடு முதலிடம்
/
ஆசிய டிரையத்லான் போட்டியில் உற்சாகம் இத்தாலி, இந்தோனேஷியா நாடு முதலிடம்
ஆசிய டிரையத்லான் போட்டியில் உற்சாகம் இத்தாலி, இந்தோனேஷியா நாடு முதலிடம்
ஆசிய டிரையத்லான் போட்டியில் உற்சாகம் இத்தாலி, இந்தோனேஷியா நாடு முதலிடம்
ADDED : பிப் 17, 2025 01:22 AM

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழ்நாடு டிரையத்லான் சங்கம் மற்றும் இந்திய டிரையத்லான் கூட்டமைப்பு சார்பில், 'ஆசிய டிரையத்லான் கோப்பை - 2025'க்கான போட்டிகள், சென்னையில் நேற்று நடந்தன.
ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படை தளத்தில், முதல் முறையாக நடந்த, ஆசிய டிரையத்லான் மும்முனை போட்டியில், இந்தியா, ஜப்பான், உஸ்பெகிஸ்தான், இந்தோனேஷியா, செக் குடியரசு, இத்தாலி உள்ளிட்ட, 14 நாடுகளை சேர்ந்த, 37 வீரர்கள் மற்றும் 16 வீராங்கனையர் பங்கேற்றனர்.
போட்டியாளர்களுக்கு, 750 மீட்டர் நீச்சல்; 20 கி.மீ., சைக்கிளிங் மற்றும் 5 கி.மீ., ஓட்டப்பந்தயம் என, மூன்று வகையான போட்டிகள், இரண்டு சுற்றுகளாக நடத்தப்பட்டன.
அதன்படி, ஐ.என்.எஸ்., அடையாறு கடற்படை தளத்தை ஒட்டிய பகுதியில் நீச்சல் போட்டி, சைக்கிள் மற்றும் ஓட்டப்பந்தய போட்டிகள், சென்னை ராஜாஜி சாலை, காமராஜர் சாலை, சிவானந்தா சாலை, அண்ணா சாலை, கொடி மரச்சாலை வழியாக நடத்தப்பட்டன.
மூன்று போட்டிகள் முடிவிலும், கணக்கிடப்பட்ட நேரத்தை மையமாக வைத்து, முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆண்கள் பிரிவில், இத்தாலி நாட்டை சேர்ந்த பிரான்செஸ்கோ டி பசிலிகோ முதலிடம்; ஜப்பானைச் சேர்ந்த தகுடோ ஓஷிமா இரண்டாம் இடம்; அயர்லாந்து வீரர் லுாக் மெக்ரேன் மூன்றாம் இடம் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில், இந்தோனேஷியா வீராங்கனை மார்டினா ஆயு ப்ரதீவி; ஜப்பான் மினோரி இகேனோ; சுவிட்சர்லாந்து ஆனா ஸிஹண்டர் ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் அதுல்யமிஸ்ரா, பரிசுகளை வழங்கினார்.
ஆண்கள் பிரிவில், முதல் இடம் பிடித்த வீரர் பிரான்செஸ்கோ டி பசிலிகோ கூறுகையில், ''போட்டியில் பங்கேற்க சில மாதங்களாக கடும் பயிற்சி மேற்கொண்டேன். அதன் பரிசாக முதலிடம் கிடைத்துள்ளது. என் வாழ்வின் அடுத்தக்கட்ட நகர்விற்கான உந்து சக்தியாகவே இதை பார்க்கிறேன்,'' என்றார்.

