/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெட்ரோல் பங்க்கில் அலப்பறை போதை ஆசாமிக்கு சிறை
/
பெட்ரோல் பங்க்கில் அலப்பறை போதை ஆசாமிக்கு சிறை
ADDED : ஜூலை 15, 2025 12:33 AM
சித்தாலப்பாக்கம், சித்தாலப்பாக்கத்தில் பெட்ரோல் போட வந்து அலப்பறை செய்த போதை ஆசாமியை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கத்தில், பெட்ரோல் பங்கிற்கு வந்த நபர், அங்கு பணியில் இருந்த இளம்பெண்ணிடம் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பும் படி கூறியுள்ளார்.
ஆனால், மின்சாரம் இல்லாததால், தற்போது பெட்ரோல் போட முடியாது என, அப்பெண் கூறியுள்ளார். போதையில் இருந்த அந்த நபர், திடீரென கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
அப்போது, அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் அதை தட்டிக்கேட்ட போது, அவரை கத்தியால் குத்திக் கிழித்தார். ஒரு கட்டத்தில், போதை தலைக்கு ஏறிய நிலையில், சாலையில் செல்வோரிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதைக்கண்ட பொதுமக்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த பெரும்பாக்கம் போலீசார், கத்தியுடன் அட்டகாசம் செய்த நபரை பிடித்து, கைது செய்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில், அவர் மேடவாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், 20, என்பதும், போதையில் வீண் தகராறு செய்ததும் தெரியவந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.