ADDED : ஜூலை 14, 2025 02:47 AM

ஆவடி:ஆவடி - பூந்தமல்லியை இணைக்கும் கண்ணப்பாளையம் பிரதான சாலை 1.60 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையையொட்டி, ஆவடியில் இருந்து சோராஞ்சேரி, ஆயில்சேரி, பருத்திப்பட்டு, திருவேற்காடு, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் என, தினமும் 2,000த்திற்கும் மேற்பட்டோர், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் சிமென்ட் கற்கள், விவசாய நிலங்கள் இருப்பதால், கனரக வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இதனால், சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
சாலையை சீரமைக்க வேண்டும் என, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, சில தினங்களுக்கு முன், 'வெட் மிக்ஸ்' கொட்டி தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், சாலையை ஒட்டி மழை நீர் வடிகால்வாய் வசதியில்லாததால், பருவமழைக்காலத்தில் மீண்டும் குண்டும் குழியுமாக மாறும் நிலை ஏற்படும் என, பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.