sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காசிமேடு மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பணி.. படுமந்தம் 3 ஆண்டில் 30 சதவீதமே முடிந்ததால் அதிருப்தி

/

காசிமேடு மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பணி.. படுமந்தம் 3 ஆண்டில் 30 சதவீதமே முடிந்ததால் அதிருப்தி

காசிமேடு மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பணி.. படுமந்தம் 3 ஆண்டில் 30 சதவீதமே முடிந்ததால் அதிருப்தி

காசிமேடு மீன்பிடி துறைமுக மேம்பாட்டு பணி.. படுமந்தம் 3 ஆண்டில் 30 சதவீதமே முடிந்ததால் அதிருப்தி


ADDED : நவ 23, 2025 12:19 AM

Google News

ADDED : நவ 23, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காசிமேடு: 'சாகர் மாலா' திட்டத்தின் கீழ், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை, 97.75 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும், 30 சதவீத பணிகள் கூட முடியவில்லை. காலக்கெடு முடிய ஒரு மாதமே உள்ள நிலையில், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என, மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், மீன் விற்பனை பணிகளிலும் பாதிப்பு ஏற்படுவதாக, மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகம், 23 மீனவ கிராமங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கிருந்து, பிற மாநிலங்களுக்கு மட்டுமின்றி, துபாய், சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், மீன் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பல கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டி தரும் காசிமேடு மீன்பிடி துறைமுகம், பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடுடன் உள்ளது. படகுகளை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததும், பெரும் பிரச்னையாக உள்ளது.

எனவே, காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்த வேண்டும் என, மீனவ சங்கங்களின் கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து, மத்திய அரசின் 'சாகர் மாலா' திட்டத்தின் கீழ் 97.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், துறைமுகத்தை மேம்படுத்தும் பணி, 2022ல் துவங்கியது.

துறைமுகம் வார்ப்பு தளம் அமைப்பது உட்பட 25 திட்டப்பணிகள் நடந்து வந்த நிலையில், கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் பணி மேற்கொள்வதற்கான அனுமதியை, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் பெறப்படவில்லை என, வழக்கு தொடரப்பட்டதால், பணிகள் கிடப்பில் போடப்பட்டன.

ஆமை வேகம் இதையடுத்து, மீன்வளத் துறை அதிகாரிகள், கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி வாங்கினர்.

கடந்த 2023, டிசம்பரில், ராயபுரத்தில் மீனவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் மீனவர்கள், பணிகளை விரைந்து துவங்கி, முறையாக முடித்து, வாழ்வாதாரம் பாதுகாக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 2024ல் துவங்கிய பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. மூன்றாண்டுகளாக நடந்தாலும் தற்போது வரை, 30 சதவீத பணிகள்கூட முடிவடையவில்லை.

கூரை அமைக்கும் பணி மிகவும் மந்தமாக நடப்பதால், மீன் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒப்பந்த காலப்படி இந்த பணியை இந்த ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். ஆனால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என, மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:

மீன்பிடி துறைமுகத்தில் கூரை அமைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள பெரிய துாண்களால், வார்ப்பு தளம் பலவீனம் அடையும் நிலை உள்ளது. தவிர, அதிகாலையில் நடக்கும் மீன் ஏலம் தடைபடுகிறது. மீன் வாங்கி விற்கும் பெண்களுக்கு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

வார்ப்பு தளத்தில் வைக்கப்பட்டுள்ள துாண்களை அகற்ற வேண்டும். மீன் விற்பனைக்கு இடையூறாக உள்ள கூரை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இடநெருக்கடி இதுகுறித்து, அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி கூறியதாவது:

காசிமேடு மீன்பிடி துறைமுக வார்ப்பு பகுதிகளில், கூரை அமைக்கும் பணி, மூன்று ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கிறது. 200 பேர் பணிபுரிய வேண்டிய இடத்தில், 20 பேர் மட்டுமே வேலை பார்க்கின்றனர்.

கூரைக்கு பயன்படுத்த வேண்டிய துாண்கள், 'ப்ரீகாஸ்ட்' எனும் கான்கிரீட் கலவையிலான கட்டுமானத்தை வெளியிடத்தில் தயாரித்து, இங்கு எடுத்து வரப்படுகின்றன.

அவற்றை, துறைமுகத்தில் துாக்கி நிறுத்தாமல், வார்ப்பு முழுதும் போட்டு வைத்துள்ளனர். இதனால், இடநெருக்கடி ஏற்பட்டு மீன் ஏலம் மற்றும் மொத்த விற்பனை பாதிக்கப்படுகிறது.

பணி துவங்கும் முன் தினம் 120 டன் மீன்கள் விற்கப்பட்ட நிலையில், வார்ப்பு முழுதும் அந்த கட்டுமானத்தை போட்டு வைத்துள்ளதால், மீன்களை வைக்க இடமின்றி 60 - 70 டன் மட்டுமே விற்கப்படுகிறது.

மேலும், பணிகளுக்கு தேவையான பணத்தை, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. அதனால், 30 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன.

கடலில் மீன்பிடித்து கரை திரும்பும் மீனவர்களுக்கு, அப்பகுதியில் மின் விளக்கு வசதி இல்லாததால், இருட்டில் மீன்களை விற்பனை செய்யும் நிலை உள்ளது.

இந்த வார்ப்பில் உள்ள மேம்பாலத்தில் அதிக பாரம் தாங்காததால், கனரக வாகனம் செல்லக்கூடாது எனக் கூறியுள்ளனர். ஆனால், இந்த இடத்தில் மிக அதிக பாரம் உள்ள துாண்களை, மேம்பாலத்தின் மேலே வைத்து, மேம்பாலத்தை பலவீனமாக்கி வருகின்றனர்.

இந்த பணிகள் குறித்த கண்காணிப்பு குழுவில், மீனவர்களை சேர்க்கவில்லை; அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இந்த துறைமுகத்தில், நுழைவாயில் கட்டட பணிகளில் மட்டும் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இங்கு, 600 கில்நெட் மீனவர்களை, சூரை மீன்பிடி துறைமுகத்துக்கு துரத்தி விட்டனர். மீதமுள்ள, 400 பைபர் படகு மீனவர்களையும் துரத்தி விட்டு, கடலோர காவல் படையினர் ஆக்கிரமிப்பு செய்யும் சூழ்நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொழில்நுட்ப பிரச்னை மீன்வளத்துறை அதிகாரி கூறியதாவது:

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மேம்பாட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வார்ப்பு தளத்தில், 100 மீட்டர் துாரத்திற்கு கூரை அமைக்கும் பணி நடந்து வரும் நிலையில், கூடுதலாக 100 மீட்டர் துாரத்திற்கு கூரை அமைக்கும் பணி நடக்க உள்ளது.

டிரில்லிங் பணி முடிந்தால்தான் கூரை அமைக்கும் பணி நிறைவடையும். இங்குள்ள சில இடங்களில் பணிகளில் தொழில்நுட்ப பிரச்னை உள்ளது. அதை களையும் பணிகள் நடக்கின்றன. இந்த துறைமுகத்திற்காக, ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டது. நிதி இல்லாமல் எந்த பணிகளும் நிற்கவில்லை.

மீன்பிடித் துறைமுகத்தில், நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை நான்கு ஒப்பந்ததாரர்கள் எடுத்துள்ளனர். இந்த பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி, 2026 ஏப்ரலில் முடிவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடந்து வரும் பணிகள்  500 விசைப்படகுகள் நிறுத்தும் வகையில் வார்ப்பு தளம்  100 நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் நிறுத்தும் தளம்  மீன் பதப்படுத்தும் கூடம்  மீன் வலை பழுதுபார்க்கும் கூடங்கள்  புதிய வார்ப்பு தளம் துவங்கி பழைய மீன் ஏலக்கூடம் வரை 6 கி.மீ., சாலை மேம்படுத்தும் பணி  மீன்பிடி துறைமுக காவல் நிலையம் முதல் காசிமேடு துறைமுகம் ஜீரோ கேட் வரை சுற்றுச்சுவர்  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்  இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.








      Dinamalar
      Follow us