/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடத்தப்பட்ட குழந்தை மீட்பு கடத்திய பெண்ணுக்கு வலை
/
கடத்தப்பட்ட குழந்தை மீட்பு கடத்திய பெண்ணுக்கு வலை
ADDED : நவ 16, 2024 12:35 AM

துரைப்பாக்கம்,
தி.நகரில் கடத்தப்பட்ட குழந்தையை, திருவேற்காடில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் போலீசார் மீட்டனர். கடத்திய பெண்ணை தேடி வருகின்றனர்.
சென்னை, துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ், 40. இவரது மனைவி நிஷாந்தி, 31. இவர்களுக்கு, 45 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.
இரண்டு நாட்களுக்கு முன் ஆரோக்கியதாஸ் வீட்டிற்கு வந்த ஒரு பெண், அரசு சார்பில் குழந்தைக்கான சிறப்பு திட்டங்களை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
அதை நம்பி, நிஷாந்தி குழந்தையுடன் ஆட்டோவில் தி.நகர் நோக்கி சென்றார். நிஷாந்தியிடம் 100 ரூபாய் கொடுத்த அந்த பெண், குழந்தைக்கு பிஸ்கெட் வாங்கி வரும்படி,கடைக்கு அனுப்பினார்.
நிஷாந்தி கடைக்கு போய் திரும்பி வருவதற்குள், குழந்தையுடன் மாயமாகியிருந்தார். குழந்தை கடத்தல் தொடர்பாக, கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
இதனிடையே, குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், திருவேற்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், அந்த குழந்தையை, பெண் சேர்த்துள்ளார்.
குழந்தை கடத்தல் விவகாரம் பெரிதாகி, பத்திரிகை, 'டிவி'க்களில் செய்தி வெளியானதால், பயந்துபோன அந்த பெண் தலைமறைவாகியுள்ளார்.
தகவல் அறிந்த போலீசார், மருத்துவமனையில் இருந்த குழந்தையை மீட்டு, நிஷாந்தியிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கடத்திய பெண்ணை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.