/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிறந்து 45 நாள் குழந்தை கண்ணகி நகரில் கடத்தல்
/
பிறந்து 45 நாள் குழந்தை கண்ணகி நகரில் கடத்தல்
ADDED : நவ 15, 2024 01:29 AM

கண்ணகி நகர், ன்னை, செம்மஞ்சேரி, கண்ணகி நகரைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ், 36; பெயின்டர். இவரது மனைவி நிஷாந்தி, 30. இவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகளாக குழந்தை இல்லை.
இந்நிலையில், 45 நாட்களுக்கு முன், ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம், நர்ஸ் எனக்கூறி, 28 வயதுடைய ஒரு பெண், நிஷாந்தி வீட்டுக்கு சென்றார்.
அவர், 'அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து வருகிறேன். உங்கள் குழந்தைக்கு அரசு மகப்பேறு திட்ட பணம் வந்துள்ளது. தி.நகர் சென்று வாங்க வேண்டும்' எனக்கூறி உள்ளார். பெண்ணின் பேச்சை நம்பிய நிஷாந்தி, அவருடன் ஆட்டோவில் சென்றார்.
தி.நகர் பேருந்து நிலையம் சென்றதும், அந்த பெண், 100 ரூபாய் கொடுத்து, பக்கத்து தெருவைக் காட்டி, அங்குள்ள ஒரு கடையில் இருந்து, பிஸ்கட், குளிர்பானம் வாங்கிவரக் கூறி உள்ளார்.
குழந்தையை, ஆட்டோவில் இருந்த அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, நிஷாந்தி கடைக்கு சென்றார். திரும்பி வரும்போது, குழந்தையுடன் பெண்ணை காணவில்லை; ஆட்டோவும் இல்லை. உடனே நிஷாந்தி, உறவினர்களிடம் மொபைல் போனில் தகவல் தெரிவித்தார்.
பின், நடந்த சம்பவம் குறித்து, கண்ணகி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார், கண்ணகி நகர் முதல் தி.நகர் மற்றும் அங்கிருந்து பல்வேறு சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறியதாவது:
தனிப்படை அமைத்து விசாரிக்கிறோம். நிஷாந்தி சில நேரம் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார். கணவர், உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். குழந்தையை விரைவில் மீட்டு விடுவோம்.
இவ்வாறு கூறினர்.