/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அஷ்டலட்சுமி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
அஷ்டலட்சுமி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : நவ 01, 2025 02:03 AM

சென்னை: பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோவிலில், மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது.
சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ளது அஷ்டலட்சுமி கோவில். சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் திகழ்கிறது.
இக்கோவில் கட்டட கலையில் சிறப்பம்சம் பொருந்திய, அஷ்டாங்க விமானத்தில் அமைந்துள்ளது. கடந்த, 2012ம் ஆண்டு மகாசம்ப்ரோஷணம் நடைபெற்ற நிலையில். கடந்தாண்டு பிப்., 15ம் தேதி, கோவில் உபயதாரர்கள் பங்களிப்பில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணி துவக்கப்பட்டது.
இதில், அஷ்டாங்க விமானம், சன்னிதிகள் மற்றும் இதர இடங்களை பழுது பார்த்து, புதுப்பித்து வர்ணம் பூசும் பணி மற்றும் கோவில் தரைதளம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள், 2 கோடி ரூபாயில் நடந்தன.
திருப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது.
இதை முன்னிட்டு, நேற்று காலை 7:00 மணி முதல் கோ பூஜை, விஸ்வரூபம், சதுஸ்தான பூஜை, பிராயசித்த ஹோமம் நடந்தது. காலை 8:30 மணிக்கு மகா பூர்ணாஹுதி, கலச புறப்பாடு நடந்தது.
அதைத்தொடர்ந்து, காலை 10:20 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நேற்று மாலை 5:30 மணிக்கு திருக்கல்யாண உத்சவம் நடந்தது.

