/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.8 கோடி தரவில்லை: 'கும்டா' விளக்கம்
/
மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.8 கோடி தரவில்லை: 'கும்டா' விளக்கம்
மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.8 கோடி தரவில்லை: 'கும்டா' விளக்கம்
மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.8 கோடி தரவில்லை: 'கும்டா' விளக்கம்
ADDED : ஜூலை 26, 2025 12:25 AM
சென்னை, 'கியூ.ஆர்., முறையில் டிக்கெட் வழங்குவதற்கான மென்பொருள் தயாரித்த நிறுவனத்திற்கு, இதுவரை பணம் ஏதும் தரப்படவில்லை' என, போக்கு வரத்து குழுமமான 'கும்டா' விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், மின்சார ரயில் ஆகியவற்றில், கியூ.ஆர்., முறையில் டிக்கெட் எடுப்பதற்கான புதிய மென்பொருள், தனியார் நிறுவனம் வாயிலாக உருவாக்கப்பட்டது.
இதன் பயன்பாட்டு நிலையில், ஒவ்வொரு டிக்கெட்டுக்கும், அதன் மதிப்பில், 1.39 சதவீதம் பராமரிப்பு செலவை வழங்கும் பொறுப்பை யார் ஏற்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால், மென்பொருள் தயாரிப்புக்கு செலவிடப்பட்ட, 8 கோடி ரூபாய் வீணாகும் நிலை ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, நம் நாளிதழில், ஜூலை, 19, 23ல் செய்திகள் வெளியாயின.
இது தொடர்பாக, ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான 'கும்டா'வின் தொடர்பு வல்லுநர் எம்.அருண் பாலாஜி அளித்துள்ள விளக்கம்:
கியூ.ஆர்., டிக்கெட் முறைக்கான மென்பொருள் தயாரிப்பதற்கான பணி, 15 கோடி ரூபாய் மதிப்பில், தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த மென்பொருள் உருவாக்க, இதுவரை எந்த ஒரு தொகையையும் அந்நிறுவனத்துக்கு அளிக்கப்படவில்லை.
பொது, தனியார் கூட்டு முறையில் தயாரிக்கப்பட்ட இந்த மென்பொருளுக்கான செலவுகளை, ஒப்பந்த நிறுவனமே மேற்கொண்டு வருகிறது.
இந்த மென்பொருள் பயன்பாட்டிற்கு வரும்போது, இதில் பதிவாகும் ஒவ்வொரு டிக்கெட்டுக்குமான தொகையில் இருந்து, பராமரிப்பு கட்டணம் என்ற அடிப்படையில், ஒப்பந்த நிறுவனம் தங்களுக்கான தொகையை, ஐந்து ஆண்டு காலம் வசூலித்து கொள்ளும்.
கியூ.ஆர்., முறையில் டிக்கெட் பெறும் மென் பொருளுக்கு மாற்றாக புதிய செயலியை உருவாக்கும் பணிகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை. பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான, இடையூறு இல்லாத ஒருங்கிணைந்த பயண அனுபவத்தை அளிப்பதில், எங்கள் செயலி முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்துள்ளார்.