/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.ஏ.எஸ்., அதிகாரி இல்லாததால் முடங்கும் 'கும்டா'
/
ஐ.ஏ.எஸ்., அதிகாரி இல்லாததால் முடங்கும் 'கும்டா'
ADDED : ஜூலை 23, 2025 12:30 AM
சென்னை:உறுப்பினர் செயலர் நிலையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி இல்லாததால், போக்குவரத்து திட்டங்களுக்கு, பிற துறைகளின் முழுமையான ஒத்துழைப்பை பெற முடியாமல், ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமமான 'கும்டா' முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பஸ், ரயில், மெட்ரோ ரயில் என, பொது போக்குவரத்து சேவைகள் செயல்பாட்டில் உள்ளன. இவை தனித்தனியே செயல்படுவதால், ஒரு சேவையில் இருந்து, மற்றொரு சேவைக்கு மாறும் பயணியர் சிரமப்படுகின்றனர்.
இதை கருத்தில் வைத்து, மத்திய அரசின் அறிவுரைப்படி,, 'கும்டா' என்ற ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து குழுமம், 2010ல் துவக்கப்பட்டது. இந்த குழுமத்தின் முதல் கூட்டம், 2012ல் நடந்தாலும், நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்படாததால், குழும பணிகள் முடங்கின.
குழுமத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்தும் வகையில், குழும தலைவராக முதல்வர் இருக்கும் வகையில், 2021ல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
அதே நேரம், குழுமத்தின் உறுப்பினர் செயலராக, சி.எம்.டி.ஏ.,வில் போக்குவரத்து திட்டங்களை கவனிக்கும், 'சீப் பிளானர்' இருப்பார் என, தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, சி.எம்.டி.ஏ., சீப் பிளானர் ஒருவர், போக்குவரத்து குழுமம் தொடர்பான பணிகளை கவனித்து வந்தார்.
இந்த குழுமத்தில், சி.எம்.டி.ஏ., - போக்குவரத்து துறை, மாநகர போக்குவரத்து கழகம், சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை உள்ளிட்டவற்றின் செயலர்கள், இயக்குநர்கள் நிலையில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.
எனவே, போக்குவரத்து குழும உறுப்பினர் செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இந்நிலையில், தெற்கு ரயில்வேயை சேர்ந்த ஐ.ஜெயகுமார், அயல்பணி அடிப்படையில், போக்குவரத்து குழும சிறப்பு அலுவலராக, 2022, ஜூனில் நியமிக்கப்பட்டார்.
அதேநேரம், சி.எம்.டி.ஏ.,வில், போக்குவரத்து சார்ந்த சீப் பிளானர்கள் யாரும் இல்லாததால், போக்குவரத்து குழும உறுப்பினர் செயலர் பதவி காலியாக இருந்தது.
இதனால், போக்குவரத்து குழும சிறப்பு அலுவலருக்கான நிதி அதிகாரங்களை, சிறப்பு அலுவலர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
சென்னையில் போக்குவரத்து சேவைகள், திட்டங்களை ஒருங்கிணைப்பதற்காக தனியார் கலந்தாலோசகர்கள் வாயிலாக, பல்வேறு திட்டங்களை இவர் உருவாக்கினார்.
ஆனால், இத்திட்டங்களை செயல்படுத்துவதில், பிற துறைகளின் ஒத்துழைப்பு சரியாக கிடைக்கவில்லை.
இதுகுறித்து, போக்குவரத்து துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
'கும்டா' எனப்படும் போக்குவரத்து குழுமம், பிற துறைகளின் குறிப்பிட்ட சில திட்டங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட வேண்டும். இந்த குழுமம் நேரடியாக எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.
எனவே, இது தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறது. ஆனால், உறுப்பினர் செயலராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி இல்லாததால், குழுமத்தின் கூட்டங்களுக்கு பல்வேறு துறைகளின் செயலர்கள், ஆணையர்களாக உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அழைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.
பிற துறைகளின் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நேரடியாக பங்கேற்காத நிலையில், போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைப்பதில் முக்கிய முடிவுகள் எடுக்க முடியவில்லை.
தற்போதுள்ள சிறப்பு அலுவலரின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரியை முழுநேர உறுப்பினர் செயலராக நியமிக்க வேண்டும். அப்போது தான், இந்த குழுமத்தின் செயல்பாடுகள் முழு பலனை தரும்.
ஏற்கனவே, சி.எம்.டி.ஏ., அல்லது போக்குவரத்து துறையில் உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரை அலுவல் ரீதியாக உறுப்பினர் செயலராக நியமிக்க வேண்டும் என, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில், அரசு விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.