நில வகைப்பாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
நில வகைப்பாடு மாற்றம் கருத்து கேட்கிறது சி.எம்.டி.ஏ.,
ADDED : ஆக 23, 2026 05:43 PM
சென்னை, ஆக. 24–
சென்னை பெருநகரில், நில வகைப்பாடு மாற்றுவது குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
சென்னை பெருநகரில் சர்வே எண் வாரியாக நில வகைப்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் தற்போதுள்ள வகைப்பாடு புதிய திட்டங்களை செயல்படுத்த பொருந்தாததாக உள்ளது.
இதனால், தற்போதுள்ள நில வகைப்பாட்டை மாற்ற கோரி நில உரிமையாளர்கள் கட்டணம் செலுத்தி சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பிக்கின்றனர்.
இதன் அடிப்படையில் பொது மக்கள் கருத்து பெற்று வகைப்பாடு மாற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வகையில், தற்போது, 30 பேர் நில வகைப்பாடு மாற்றம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை பெருநகரில், புழல், சோழவரம், குன்றத்துார், பூந்தமல்லி, தாம்பரம், பல்லாவரம், மயிலாப்பூர் என பல்வேறு பகுதிகளில் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதில், ஆறு இடங்களில் விவசாய நிலங்களை வேறு வகைப்பாட்டுக்கு மாற்ற கோரியுள்ளனர். இதே போல், 20 இடங்களில், குடியிருப்பு வகைப்பாட்டில் உள்ள, நிலங்கள் வணிகம், நிறுவனம் போன்ற வகைப்பாட்டுக்கு மாற்றப்பட உள்ளன. முன் எப்போதும் இல்லாத வகையில், 20 இடங்களில், குடியிருப்பு வகைப்பாட்டில் இருந்து வேறு வகைப்பாடுகளுக்கு நிலங்கள் மாற்றப்பட உள்ளன.
அந்தந்த பகுதி மக்கள் நில வகைப்பாடு மாற்றம் குறித்து தங்கள் கருத்துகளை, 21 நாட்களுக்குள் அனுப்பலாம்.
இது குறித்து கூடுதல் விபரங்களை, www.cmdachennai.gov.in/ என்ற இணையதளத்தில் அறியலாம் என, சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.
***
