/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலம் ஆக்கிரமிப்பு
/
கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலம் ஆக்கிரமிப்பு
கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலம் ஆக்கிரமிப்பு
கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.12 கோடி நிலம் ஆக்கிரமிப்பு
ADDED : ஜன 28, 2025 12:22 AM

பாரிமுனை,பாரிமுனை கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான, 12 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம், ஆக்கிரமிப்பாளரால் கபளீகரம் செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆக்கிரமிப்பை உறுதி செய்துள்ள கோவில் நிர்வாகம், 'அனுமதியில்லா கட்டுமானத்தை தடுக்கக்கோரி மாநகராட்சியிலும், காவல் துறையிலும் புகார் அளித்துள்ளோம்' என, தெரிவித்துள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள கந்தக்கோட்டம் கந்தசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, நுாறு ஆண்டுகளுக்கு முன் ஜமின்தார்கள், வாரிசு இல்லாத செல்வந்தர்கள், ஆன்மிகவாதிகள், பொதுமக்கள் என, பல தரப்பினரும் தங்க, வைர நகைகள், கட்டடங்கள், நிலம் ஆகியவற்றை, கோவிலுக்கு தானமாகவும், காணிக்கையாகவும் வழங்கிஉள்ளனர்.
கபளீகரம்
அந்த வகையில், கந்தசாமி கோவிலுக்கு, பல நுாறு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. அவற்றை முறையாக பராமரிக்காமலும், பத்திரப்பதிவு செய்யாமலும் விட்டதால், பல இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன.
கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, பாரதிதாசன் தெரு, கதவு எண் 7ல், கோவிலுக்கு சொந்தமான, 8,000 சதுரடி நிலம், ஆக்கிரமிப்பாளர்களால் கபளீகரம் செய்யப்பட்டு, அங்கு கட்டடம் கட்டும் பணி நடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
சென்னை, எருக்கஞ்சேரியில் கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான, 8,000 சதுர அடி நிலம் உள்ளது. அந்த இடத்தை ஆக்கிரமித்து, அதே பகுதியைச் சேர்ந்த, கிறிஸ்துவ மதபோதர் ஒருவர் புதிதாக கட்டடம் கட்டி வருகிறார்.
தன் செல்வாக்கால், அரசு அதிகாரிகள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை தொடர்பு வைத்துள்ள இவர், சிறிது சிறிதாக, 8,000 சதுரடி நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளார்.
தற்போதைய நிலத்தின் சந்தை மதிப்பு, 12 கோடி ரூபாய். இதுகுறித்து, புகார் அளித்தும் அரசும், கோவில் நிர்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஏற்கனவே இவர், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி, இந்த இடத்தின் அருகே, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3,200 சதுரடி நிலத்துடன் கூடிய கட்டடத்தை ஆக்கிரமித்துள்ளார்.
மேலும், கட்டடத்தின் ஒரு பகுதியை இடித்துவிட்டு, புதிதாக கட்டுமான பணியை செய்து வருகிறார். ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள கோவில் நிலம் மீட்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பணி நிறுத்தம்
இதுகுறித்து, கோவில் செயல் அலுவலர் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கை:
கொடுங்கையூர், எருக்கஞ்சேரியில், கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் உள்ள, 23 மனை குடியிருப்புகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், கொடுங்கையூர், பாரதிதான் தெரு, எண் 8/7ல் கோவிலுக்கு சொந்தமான நிலம் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதை, ஏ.ஐ.பி.ராஜ் மற்றும் அவரது மனைவி கலைசெல்வி ஆகியோர் கோவில் அனுமதியில்லாமலும், மாநகராட்சி அனுமதியில்லாமலும், பழைய கட்டடத்தை இடித்து, புதிதாக கான்கிரீட் கட்டடம் கட்டுவதாக  புகார் வந்தது.
நேரில் ஆய்வு செய்தோம். கட்டுமான பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுமான பணியை தொடர மாட்டோம் என, அவர்கள் கடிதம் எழுதி தந்துள்ளனர். காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டு தொடர் நடவடிக்கையில் உள்ளது.
அனுமதியின்றி நடக்கும் கட்டுமானத்தை தடை செய்யக்கோரி,  சென்னை மாநகராட்சிக்கு புகார் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

