/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பறிமுதலான ஆம்னி பேருந்துகளை விடுவிக்க கோரி முதல்வருக்கு கடிதம்
/
பறிமுதலான ஆம்னி பேருந்துகளை விடுவிக்க கோரி முதல்வருக்கு கடிதம்
பறிமுதலான ஆம்னி பேருந்துகளை விடுவிக்க கோரி முதல்வருக்கு கடிதம்
பறிமுதலான ஆம்னி பேருந்துகளை விடுவிக்க கோரி முதல்வருக்கு கடிதம்
ADDED : ஆக 31, 2025 03:20 AM
சென்னை:தாம்பரம் போக்குவரத்து துணை கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில், பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை விடுவிக்கக்கோரி, முதல்வர் ஸ்டாலினுக்கு, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இது குறித்து, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம்:
சாலை விபத்துகள் யாராலும், திட்டமிட்டு செய்யப்படுவதில்லை. குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை ஓட்டுநர்களுக்கு மருத்துவ பரிசோதனை, முறையான பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
இருப்பினும், எதிர்பாராத வகையில் விபத்துகள் ஏற்பட்டால், யார் காரணம் என தீர்மானிக்கும் முன்னரே, தாம்பரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட போக்குவரத்து போலீசார், பேருந்துகளை பறிமுதல் செய்து விடுகின்றனர்.
இதனால், மாத தவணை, சாலை வரி, ஓட்டுநர் சம்பளம் என, உரிமையாளர்களுக்கு நிதி நெருக்கடி ஏற்படுகிறது.
இது போன்ற சம்பவங்கள், தாம்பரம் போக்குவரத்து துணை கமிஷனர் சமய் சிங் மீனா உத்தரவின்பேரில், துணை கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில், சில மாதங்களாக நடந்து வருகின்றன.
கடந்த மாதம் 15ம் தேதி பெருங்களத்துாரில் விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து, பொத்தேரி டி-1 காவல் நிலையத்தில் 25 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
அதேபோல், இம்மாதம் 22ம் தேதி விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து, ஒன்பது நாட்களாக அதே பொத்தேரி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 27ம் தேதி விபத்தில் சிக்கிய பேருந்து, டி - 13 சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே, சட்டத்தை மீறிய துணை கமிஷனரின் உத்தரவை தடுத்து, காவல் நிலையங்களில் தேவையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளை உடனடியாக விடுக்க வேண்டும்.
இது போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

