/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரேஷன் கடைகளில் நாசமாகுது அரிசி, கோதுமை கட்டடத்தை சீரமைத்து தர உள்ளாட்சிகள் மறுப்பு
/
ரேஷன் கடைகளில் நாசமாகுது அரிசி, கோதுமை கட்டடத்தை சீரமைத்து தர உள்ளாட்சிகள் மறுப்பு
ரேஷன் கடைகளில் நாசமாகுது அரிசி, கோதுமை கட்டடத்தை சீரமைத்து தர உள்ளாட்சிகள் மறுப்பு
ரேஷன் கடைகளில் நாசமாகுது அரிசி, கோதுமை கட்டடத்தை சீரமைத்து தர உள்ளாட்சிகள் மறுப்பு
ADDED : நவ 22, 2024 12:19 AM
சோழிங்கநல்லுார்,
சோழிங்கநல்லுார் உணவு பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தின் கீழ், 147 ரேஷன் கடைகள் உள்ளன. இதில், 106 கடைகள் அரசு கட்டடத்திலும், 41 கடைகள் தனியார் வாடகை கட்டடத்திலும் செயல்படுகின்றன. இவற்றின் கீழ், 2.15 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.
இந்த ரேஷன் கடைகளை, காஞ்சி மக்கள் அங்காடி, அடையாறு கூட்டுறவு பண்டக சாலை, கஸ்துாரிபா மகளிர் கூட்டுறவு பண்டக சாலை மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வழியாக நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு கனமழையின்போதும், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், சோழிங்கநல்லுார், துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில், தாழ்வாக உள்ள கடைகளில் வெள்ளம் புகுந்து, பொருட்கள் நாசமாகும்.
கடந்த ஆண்டு, 'மிக்ஜாம்' புயலின்போது, 32 கடைகளில் வெள்ளம் புகுந்து பொருட்கள் நாசமாகின. இதில், 85,000 கிலோ அரிசி, 17,000 கிலோ கோதுமை, 4,700 கிலோ சர்க்கரை என, 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
அந்தந்த கூட்டுறவுகள் சங்கங்கள் பொருட்களுக்கு காப்பீடு செய்ததால், அதில் இருந்து பணம் வழங்கப்பட்டது. இருப்பினும், அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு ஆகியவை அத்தியாவசியமாக உள்ளதால், நாசமானால் காப்பீட்டில் சரி செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தவறானது. முடிந்த அளவு பாதுகாக்க வேண்டும்.
இப்போது, 40 கடைகளில் விரிசல், தரையில் ஊற்றுநீர், மேற்கூரை சேதம், எலித்தொல்லை போன்ற பிரச்னைகள் உள்ளன. இந்த கடைகளை சீரமைப்பது யார் என, துறைகள் இடையே போட்டி நிலவுகிறது. இதனால், இந்த பருவ மழைக்கும் வெள்ளத்தில் உணவு பொருட்கள் நாசமாகும் சூழல் உள்ளது.
உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பொருட்களை அந்தந்த கடைகளுக்கு அனுப்பி, அவை முறையாக மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறதா என்று கண்காணிக்கிறோம். ஊழியர் நியமனம், வாடகை, முறையாக வினியோகிப்பது, கடை பராமரிப்பு போன்ற பணிகளை, கடை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் செய்ய வேண்டும்.
இதற்கு, தமிழக அரசு மானியம் வழங்குகிறது. சேதமடைந்த கடைகளை சீரமைப்பது குறித்து, அந்தந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கடிதம் எழுதி உள்ளோம். அவர்கள், மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகம் வாயிலாக கடைகளை சீரமைக்க வேண்டும். வாடகை கட்டடத்திற்கு, கட்டட உரிமையாளர்களிடம் பேச வேண்டும்.
ரேஷன் பொருட்கள் வினியோகத்தில், எங்கள் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. மூன்று துறைகளையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தால், ரேஷன் பொருள் வினியோகம், கட்டட பிரச்னைகளை உடனுக்குடன் சரி செய்ய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி, ஊராட்சி இடத்தில் இயங்கும் ரேஷன் கடைகள், எம்.பி., - எம்.எல்.ஏ., - கவுன்சிலர் நிதியில் கட்டப்பட்டது. சீரமைப்பு பணிகளை, மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும். பல தடவை முறையிட்டும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
எங்களிடம் போதிய நிதி இல்லாததால், பராமரிக்க முடியவில்லை. இதனால், உணவு பொருட்கள் சேதமடைகின்றன. அதிகம் வெள்ளம் புகும் கடைகளில், மழைக்காலம் முடியும் வரை, இரும்பு மேஜை அடுக்கி, அதன் மேல் பொருட்களை வைக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.