/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தில்லை நடராஜனை போற்றிய மாதவன் - பத்மலட்சுமி பரதம்
/
தில்லை நடராஜனை போற்றிய மாதவன் - பத்மலட்சுமி பரதம்
ADDED : ஜன 03, 2025 12:12 AM

பரத கலைஞர் பத்மஸ்ரீ மீனாட்சி சித்தரஞ்சன் மாணவர்கள், சகோதர் - சகோதரிகளான மாதவன், பத்மலட்சுமியின் நிகழ்ச்சி, பிராட்வே தமிழ் இசை சங்கத்தில் நடந்தது.
'நமசிவாய வாழ்க' எனும் தலைப்பில், தங்களுடைய நிகழ்ச்சியை, கம்பீர நாட்டை ராக மல்லாரியோடு துவங்கினர்.
நிகழ்ச்சியின் முக்கிய உருவப்படியாக, 'கருணை வடிவான கையிலைவாச' என்ற வரிகளை, பல்லவியாக அமையப்பெற்ற, பந்தனைநல்லுார் ஸ்ரீனிவாச பிள்ளை ரேவதி ராகத்தில் இயற்றப்பட்ட பதவர்ணம் நிகழ்ந்தது.
மாதவன், சிவலிங்கமாய் அமர, பத்மலட்சுமி நாகபூஷணமாய் அலங்கரிக்கத் துவங்கினார். இந்த வர்ணமானது, பூர்வாங்கம் சிவபெருமானின் கருணாமூர்த்தி வடிவையும், அவர் நிகழ்த்திய சில வரங்களை கூறுவதாகவும் அமைந்திருந்தது.
அதாவது, எமதர்மனை காலால் உதைத்த மார்க்கண்டேயனுக்கு வரமளித்தது, கனகமுனிக்கு வரம் அளித்தது, பஞ்ச பூதங்களை தன்னுள் அடக்கி ஆளும் சிவனைப் போற்றி இருந்தது.
தொடர்ந்து தேவகாந்தாரம் ராகத்தில் 'சிவனை நினைத்திரு மனமே' என்ற பதம் துவங்கியது.
சுவாமிக்கு பூஜை செய்யும் பக்தர், தன் மனதுடன் பேசுவதுபோல் இருந்தது. சிதம்பரத்தில் ஆடுகிறவன், திகம்பர ரூபன், ஜோதி வடிவானவன், முருகன் கணபதி பூதகணங்கள் அனைவரும் இணைந்து ஆடும் அந்த நடராஜனை மனதில் நினைத்தால் எண்ணிய காரியங்கள் கைக்கூடும் என, நடனத்தில் எளிதாய் இருவரும் விளக்கினர்.
இதில், பிரம்மதேவரும், விஷ்ணுவும், சிவன் அடியையும் முடியையும் தேடிச் சென்ற நிகழ்வு, சிறு சஞ்சாரியாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் நிறைவாக, கரஹரப்ரியா ராகத்தில் 'ஆடும் கலை தெய்வமே' என்ற பதம் துவங்கியது.
ஜதிக்கு, ஈசன் ஆட ஸ்வரக்கோர்வைக்கு அம்பாளின் நடனம் என நடந்த, நிருத்த கோர்வைகள் அற்புதமாய் அமைய 'சிவபுராணம்' வரிகளை மங்களமாக கொண்டு சிவமயமாய் தங்களது நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.
-மா.அன்புக்கரசி

