/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தவறான முடிவுகளால் தள்ளாடும் சென்னை பல்கலை 7 மாதங்களாக கூடாத சிண்டிகேட்
/
தவறான முடிவுகளால் தள்ளாடும் சென்னை பல்கலை 7 மாதங்களாக கூடாத சிண்டிகேட்
தவறான முடிவுகளால் தள்ளாடும் சென்னை பல்கலை 7 மாதங்களாக கூடாத சிண்டிகேட்
தவறான முடிவுகளால் தள்ளாடும் சென்னை பல்கலை 7 மாதங்களாக கூடாத சிண்டிகேட்
ADDED : ஜூன் 11, 2025 01:00 AM
- நமது நிருபர்-
சென்னை பல்கலையில், கடந்த ஏழு மாதங்களாக சிண்டிகேட் கூட்டம் நடக்காத நிலையில், நிர்வாகம் எடுக்கும் தவறான முடிவுகளால், பல்கலை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது. .
சென்னை பல்கலையில், ஒவ்வொரு மாதமும் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படும். அதில் உள்ள உறுப்பினர்கள், பல்கலை சார்ந்த கல்விப் பணிகள் குறித்து விவாதித்து, ஒப்புதல் அளிப்பது வழக்கம்.
ஆனால், கடந்தாண்டு டிசம்பருக்கு பின், சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படவில்லை. இதனால், பல்கலையில் நடக்கும் எந்த பணிகளைப் பற்றியும் பேராசிரியர்களுக்கு தெரிவதில்லை.
இதுகுறித்து, சென்னை பல்கலை மூத்த பேராசிரியர்கள் கூறியதாவது:
துணை வேந்தர் நியமிக்கப்படாததால், பல்கலையே முடங்கி உள்ளது. ஆனாலும், சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு வந்தன. கடந்த ஏழு மாதங்களாக அதுவும் நடக்கவில்லை. இதனால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அடங்கிய வழிகாட்டி குழுவினர், பல்கலை விதிகளுக்கு மாறாக, தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.
முக்கியமாக, பல்கலையின் உறுப்புக் கல்லுாரி முதல்வர்களை நியமிக்கும் குழுவில், பல்கலை மூத்த பேராசிரியர்கள் இருக்க வேண்டிய நிலையில், பல்கலை நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத தொழில்நுட்பக் கல்வி பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர்.
தொழில்நுட்ப கல்லுாரிக்கான நடைமுறை வேறு; கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளுக்கான நடைமுறைகள் வேறு என்பதை அறியாமல், முதல்வர்களை நியமிப்பதால், கல்லுாரி நிர்வாகம் முடங்கும் நிலையில் உள்ளது.
அதேபோல், உறுப்புக் கல்லுாரிகளை மேற்பார்வை செய்ய, இளநிலை உதவிப் பேராசிரியர்கள் அனுப்பப்படுகின்றனர். அவர்கள், முதல்வரிடம் கருத்து சொல்லவோ, வளர்ச்சிப் பணிகள் குறித்து பேசவோ தயங்குகின்றனர்.
பொதுவாக, பள்ளிகளுக்கான கல்வியாண்டு, மே முதல் ஏப்., வரையிலும்; கல்லுாரிகளுக்கான கல்வியாண்டு, ஜூன் முதல் மே மாதம் வரையிலும்; பல்கலைகளுக்கான கல்வியாண்டு, ஜூலை முதல் ஜூன் வரையிலும் நடைமுறையில் உள்ளது.
அதனால், அந்த கல்வியாண்டின் இடையில் பணி நிறைவுபெறும் ஆசிரியர்கள், அந்த கல்வியாண்டு முடியும் வரை மீள் பணியமர்வு செய்யப்படுவது வழக்கம்.
ஆனால், சென்னை பல்கலையில், இந்த மாதம் வரை கல்வியாண்டு உள்ள நிலையில், மே 30ம் தேதியே பலருக்கு பணி ஓய்வுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. அதில், சிலர் துறைத் தலைவர்களாகவும் உள்ளனர். அவர்கள் வகித்த பொறுப்புகளை, யாரிடம் ஒப்படைப்பது என்பது குறித்த எந்த விபரமும், வழிகாட்டுதலும் இல்லை. பல்கலையின் 168 ஆண்டு கால நடைமுறையில், இதுபோன்ற குழப்பங்கள் நிகழவில்லை.
அதேபோல், ஓய்வூதியர் பணப்பலன்கள் குறித்தோ, பல்கலை பாடத்திட்டங்கள் குறித்தோ எந்த முடிவையும் எடுக்க முடியாமல், பல்கலை நிர்வாகம் தள்ளாடுகிறது. இதற்கு தீர்வாக, சிண்டிகேட் கூட்டம் நடத்தி, உறுப்பினர்களுடன் விவாதித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***