/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இ.சி.ஆரில் பெண்களை மிரட்டிய வழக்கு தலைமறைவான முக்கிய குற்றவாளி கைது
/
இ.சி.ஆரில் பெண்களை மிரட்டிய வழக்கு தலைமறைவான முக்கிய குற்றவாளி கைது
இ.சி.ஆரில் பெண்களை மிரட்டிய வழக்கு தலைமறைவான முக்கிய குற்றவாளி கைது
இ.சி.ஆரில் பெண்களை மிரட்டிய வழக்கு தலைமறைவான முக்கிய குற்றவாளி கைது
ADDED : பிப் 02, 2025 12:43 AM
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், காரில் பெண்களை வழிமறித்த வழக்கில், ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சந்துரு என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து, பள்ளிக்கரணை காவல் துணை கமிஷனர் கார்த்திகேயன் கூறியதாவது:
கடந்த 25ம் தேதி, கிழக்கு கடற்கரை சாலையில், பெண்களை காரில் சென்று வழிமறித்து மிரட்டியது தொடர்பாக, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, சிசிடிவி மற்றும் மொபைல் போன் வீடியோ வாயிலாக, ஏழு குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்களில், கல்லுாரி மாணவர்கள் நான்கு பேர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். தற்போது, சந்துரு என்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இருவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
சந்துரு மீது, ஜெ.ஜெ., நகர், கோட்டூர்புரம் காவல் நிலையங்களில், கடத்தல் மற்றும் மோசடி வழக்குகள் உள்ளன.
பின், மொபைல் போன் கடை நடத்தி வந்துள்ளார். அப்போது தான், அவர் மீது மோசடி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்பின், வாகனங்கள் வாங்கி விற்கும் தொழில் நடத்தி வருகிறார். சந்துருவின் உறவினர் ஒருவர் கட்சி சார்ந்தவராக உள்ளார்.
இந்த வழக்கில் சந்துரு உறவினர்களுக்கு தொடர்பு இருந்தால், அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும்.
சந்துருவின் நண்பரான சந்தோஷ், தன் கார்களை போலீசார் பிடிக்காமல் இருக்கவும், 'டோல்கேட்' கட்டணம் செலுத்தாமல் தப்பிக்கவும், கட்சிக் கொடி கட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதையே சந்துருவுக்கும் பரிந்துரை செய்துள்ளார்.
சம்பவத்தில் தொடர்புடைய மஹிந்திரா தார் கார், ஊட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருடையது. வாகனங்களில் வந்த ஆண்கள் யாரும் மது அருந்தவில்லை.
சபாரி கார், அனிஷ் என்பவருக்கு சொந்தமானது. கடந்த ஆறு மாதங்களாக சந்துரு தான் அந்த காரை பயன்படுத்தி வந்துள்ளார்.
விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். சந்துரு கைது செய்யப்பட்ட இடம், குற்றவாளிகளின் புகைப்படம் என்பதெல்லாம், புலன் விசாரணைக்கு உட்பட்டது.
அவற்றை வெளியிடவோ, அவை பற்றி கூடுதல் தகவல்கள் தரவோ இயலாது. விரைவில் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவர்.
முட்டுக்காடு பாலப் பகுதியில், கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். அங்கு, இரவில் யாரும் நிற்காமல் இருக்க, போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.