/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கும்மிருட்டாகும் பிரதான சாலை: வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
/
கும்மிருட்டாகும் பிரதான சாலை: வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
கும்மிருட்டாகும் பிரதான சாலை: வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
கும்மிருட்டாகும் பிரதான சாலை: வாகன ஓட்டிகள் 'திக்... திக்'
ADDED : ஆக 28, 2025 12:17 AM

ஆவடி, தெருவிளக்கு இல்லாமல் கும்மிருட்டாகும் பருத்திப்பட்டு - கோலடி சாலையில், வாகன ஓட்டி கள் தினசரி பீதியில் பயணித்து வருகின்றனர்.
ஆவடி அடுத்த பருத்திப்பட்டு - கோலடி சாலை, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்டது. இங்கு மகாலட்சுமி நகர், எமரால்டு அவென்யு, எம்.ஜி.ஆர்., நகர், கே.எஸ்.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
சாலையின், ஒருபுறம் ஆவடி மாநகராட்சிக்கும், கோலடி ஏரி உட்பட்ட பகுதிகள் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும்.
இந்த சாலையில், மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், செங்கல் சூளை மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. ஒன்றரை கி.மீ., துாரமுள்ள இந்த சாலை இருபுறமும், கருவேல மரங்களால் சூழப்பட்டு, பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
மேலும், சாலை முழுதும் மின் விளக்கு இல்லாமல், இருளில் மூழ்கி காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் பீதியில் பயணிக்கின்றனர்.
இது குறித்து பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள், மேற்படி சாலையில் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணலி விரைவு சாலை மணலி, எம்.எப்.எல்., சந்திப்பு துவங்கி, சாத்தாங்காடு சந்திப்பு வரையிலான, 2.5 கி.மீ., துார சாலையை, தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை துறைமுகம் நோக்கி செல்லும், டிரைலர், கன்டெய்னர் லாரிகளால், இலகுரக வாகனங்கள், ஆட்டோ, கார், பைக், ஸ்கூட்டரில் செல்வோர் அதிகளவில் விபத்தில் சிக்குவது வாடிக்கையாக இருந்து வந்தது.
தீர்வாக, கன்டெய்னர் லாரிகள் செல்வதற்கு எதுவாக, கான்கிரீட் தடுப்பு கற்கள் சாலையில் அமைக்கப்பட்டு, தனி வழி ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, விபத்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, இந்த, 2.5 கி.மீ., துாரம் மணலி விரைவு சாலையில் உள்ள, 30க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள், இடைவெளி விட்டு எரிவதால், வாகன ஓட்டிகள் சட்டென நிலைதடுமாறுகின்றனர்.
சில நேரங்களில், சாலையை இரண்டாக பிரிக்க அடுக்கப்பட்டிருக்கும் கான்கிரீட் கற்கள் தெரியாமல், விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது.
சமீபத்தில், மினி லாரி ஒன்று விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, தெருவிளக்குகளை முறையாக பழுது பார்க்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.