/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மலேஷியாவிற்கு பறந்த விமானம் பறவை மோதியதால் தரையிறக்கம்
/
மலேஷியாவிற்கு பறந்த விமானம் பறவை மோதியதால் தரையிறக்கம்
மலேஷியாவிற்கு பறந்த விமானம் பறவை மோதியதால் தரையிறக்கம்
மலேஷியாவிற்கு பறந்த விமானம் பறவை மோதியதால் தரையிறக்கம்
ADDED : அக் 26, 2025 01:27 AM
சென்னை: மலேஷியா புறப்பட்ட விமானத்தில், பறவை மோதியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னையில் இருந்து மலேஷிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் செல்லும், 'ஏர் ஏசியா' விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு 11:50 மணிக்கு புறப்பட்டது.
விமானத்தில் 182 பயணியர், எட்டு ஊழியர்கள் உட்பட 190 பேர் இருந்தனர். விமானம் 'ரன்வே'யில் ஓடி வானில் பறக்க துவங்கியபோது, விமானத்தின் முன்பகுதியில் எதிர்பாராத விதமாக பறவை மோதி இன்ஜின் பகுதியில் நுழைந்தது.
ஏ.டி.சி., எனும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு, விமானி தகவல் தெரிவித்து, உடனடியாக தரையிறக்கினார். பின் 'பே' எனும் விமானம் நிற்கும் பகுதிக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.
விமான பொறியாளர்கள் குழு பறவை மோதிய இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சில பாகங்கள் பறவை மோதியதால் சேதமடைந்து இருப்பதை கண்டறிந்து, இனி விமானத்தை இயக்குவது ஆபத்து என தெரிவித்தனர்.
இதையடுத்து, பயணியர் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு, நகரில் உள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தின் பாகங்களை சீர்செய்து, மீண்டும் விமானம் நேற்று மாலை புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று மாலை 4:30 மணிக்கு, பயணியருடன் 'ஏர் ஏசியா' விமானம் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து, மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை துவங்க உள்ளது.
'டுபாக்கூர் சாதனங்கள்'
விமான நிலையங்களில், விமானங்கள் தரையிறங்கும்போதும், புறப்படும்போதும் பறவைகள் உள்ளதா என கண்காணித்து, அவற்றை விரட்டுவது வழக்கம். இதற்கென தனியாக ஆட்கள் நியமிக்கப்பட்டு இருப்பர். இவர்கள் பட்டாசு வெடிகளை கொண்டு பறவைகளை விரட்டுவர்.
இவற்றை நவீனப்படுத்தும் வகையில், சில மாதங்களுக்கு முன் சென்னை விமான நிலைய அதிகாரிகள் இடி சத்தம் போன்றவற்றை எழுப்பும் சாதனங்களை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தனர். அதிலிருந்து எழும் சத்தத்தால் பறவைகள் உள்நுழைய வாய்ப்பில்லை என தெரிவித்தனர்.
இவ்வாறு வாங்கப்பட்ட சாதனங்களால் எந்த பயனும் இல்லை; பயணியர் பாதுகாப்புக்காக எந்த உருப்படியான முயற்சிகளையும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மேற்கொள்வதில்லை என, பயணியர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

