/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி ரூ.1.80 கோடி நிலம் சுருட்டியவர் கைது
/
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி ரூ.1.80 கோடி நிலம் சுருட்டியவர் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி ரூ.1.80 கோடி நிலம் சுருட்டியவர் கைது
போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி ரூ.1.80 கோடி நிலம் சுருட்டியவர் கைது
ADDED : பிப் 13, 2025 12:40 AM

ஆவடி, திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்து வல்லுார், லட்சுமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரி, 64. இவர், பொன்னேரி, விச்சூர் கிராமத்தில், 3,600 சதுர அடி நிலத்தை, கடந்த 1985ல், செல்வநாதன் என்பவரிடம் இருந்து, கிரையம் பெற்றார்.
இந்நிலையில், செல்வநாதனின் மகன் தமிழ்ச்செல்வன் என்பவர், மேற்கூறிய நிலத்தின் நகலை கொண்டு, 1999 ல், கோட்டீஸ்வரி இறந்ததாக போலி இறப்பு சான்றிதழ் மற்றும் போலி வாரிசு சான்றிதழ் தயார் செய்துள்ளார்.
பின், கோட்டீஸ்வரியின் மகள்கள் சவுபாக்கியவதி மற்றும் அம்சவேணி போல், ஆள்மாறாட்ட நபர்கள் வாயிலாக, 2022ல், அவரது பெயரில், திருவொற்றியூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், பொது அதிகாரம் பெற்றுள்ளார்.
கடந்த 2023 ல், கோட்டீஸ்வரி, அந்த நிலத்தை சுத்தம் செய்ய சென்றபோது, தமிழ்ச்செல்வன் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. நிலத்தின் மதிப்பு, 30 லட்சம் ரூபாய்.
மற்றொரு மோசடி
ரமணா நகரைச் சேர்ந்தவர் தசரதன். 65. இவரது பெயரிலும், இவரது மனைவி விஜயலட்சுமி பெயரிலும், வெள்ளிவாயல் சாவடி கிராமத்தில், 7.52 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
விஜயலட்சுமி இறந்ததாக போலி இறப்பு சான்றிதழ், போலி பட்டா மற்றும் போலி வாரிசு சான்றிதழை, தமிழ்செல்வன் தயாரித்துள்ளார். பின், அவரது வாரிசு தசரதன் என்பது போல் ஆள்மாறாட்ட நபர் வாயிலாக, 2022 ல், தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பொது அதிகாரம் பெற்றுள்ளார்.
சந்தேகத்தில் வில்லங்க சான்று போட்டு பார்த்தபோது, மோசடி நடந்தது தெரிந்தது. நிலத்தின் மதிப்பு, 1.50 கோடி ரூபாய்.
பாதிக்கப்பட்டோர், ஆவடி மத்திய குற்ற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான தனிப்படை போலீசார், இரு நில மோசடியிலும் தலைமறைவாக இருந்த திருவொற்றியூர் திருநகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனை, 42, கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

