ADDED : ஜூன் 12, 2025 12:25 AM
பெரம்பூர் :கொளத்துாரை சேர்ந்தவர் புஷ்பலிங்கம், 25. இவர், அரசு போக்குவரத்து கழக மாநகர பேருந்தில் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் மதியம், தடம் எண் 29ஏ பேருந்தை, அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூர் நோக்கி ஓட்டி சென்றார்.
ஓட்டேரி பிரிக்ளின் சாலையில் செல்லும்போது, அவ்வழியே உடன் வந்த, 'டாடா ஏஸ்' சரக்கு வாகனத்தின்மீது, பேருந்து உரசி சென்றது. இதனால், புஷ்பலிங்கத்தை, சரக்கு வேன் டிரைவர் தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார்.
தாக்குதலில் காயமடைந்த புஷ்பலிங்கத்தை பயணியர் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவரை பிடித்து, தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தலைமை செயலக குடியிருப்பு போலீசார் நடத்திய விசாரணையில், பேருந்து டிரைவரை தாக்கியது, ஓட்டேரியை சேர்ந்த செந்தில்குமார், 49 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.