/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஏ.டி.எம்.,மில் பெண்களை படம் பிடித்தவர் கைது
/
ஏ.டி.எம்.,மில் பெண்களை படம் பிடித்தவர் கைது
ADDED : ஏப் 13, 2025 09:09 PM
பேசின் பாலம்,:புளியந்தோப்பைச் சேர்ந்த 21 வயது பெண், தாயுடன், புளியந்தோப்பு, காந்திநகர் சந்திப்பில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் நேற்று முன்தினம் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது, அவர்களுக்கு பின்புறம் நின்றிருந்த நபர் ஒருவர், மொபைல் போனில் 'பிளாஷ் லைட்' போட்டு இருவரையும் படம் பிடித்துள்ளார். அதை கவனித்த தாயும், மகளும் கத்தி கூச்சலிட்டனர்.
அங்கிருந்தோர், அவரை பிடித்து பேசின் பாலம், போலீசில் ஒப்படைத்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர், 'அவசரமாக போன் பேச வேண்டும்' எனக் கூறி, அங்கிருந்து தப்பினார். அதிர்ச்சி அடைந்த போலீசார், சூளை பகுதியில் பதுங்கிய அவரை, கைது செய்து விசாரித்தனர்.
இதில், கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த தங்க நகை ஆசாரி ரஞ்சித், 37, என்பதும், சூளை, அப்பாராவ் கார்டன் பகுதியில் வேலை செய்யும் இவர், மது போதையில் ஏ.டி.எம்., மையத்திற்கு வந்த பெண்களை புகைப்படம் எடுத்ததும் தெரிந்தது.
இதையடுத்து, போலீசார் ரஞ்சித்தை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

