ADDED : நவ 19, 2024 12:25 AM

அண்ணா நகர், பள்ளியின் பெண் நுாலகருக்கு அவப்பெயரை ஏற்படுத்த, வெவ்வேறு எண்களில் ஆபாச படம், வீடியோ அனுப்பி, தனியார் செயலி வாயிலாக தொல்லை கொடுத்த, பக்கத்து வீட்டுக்காரரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
முகப்பேரை சேர்ந்த 40 வயதுடைய நபர், கடந்த செப்., மாதம், அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:
என் 38 வயது மனைவி, தனியார் பள்ளியில் நுாலகராக பணிபுரிகிறார். மனைவிக்கு சில நாட்களாக வெவ்வேறு எண்களில் ஆபாச படம், வீடியோ மற்றும் குறுந்தகவல் வருகிறது.
அதேபோல், மனைவியை, அதேபள்ளியின் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியருடன் சேர்த்து அவதுாறு பரப்பப்படுகிறது.
இவ்வாறு புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
போலீசார் விசாரித்ததில், அதேபள்ளியில் மருத்துவ உதவியாளராக பணிபுரியும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணின் கணவரான விஜயராஜன், 43 என்பவர் இச்செயலில் ஈடுபட்டது தெரிந்தது.
அந்த பெண் மீது அவப்பெயர் ஏற்படுத்த செய்தாக ஒப்புக் கொண்டார். நேற்று விஜயராஜனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.