/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒடிஷாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது
/
ஒடிஷாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் கைது
ADDED : செப் 16, 2025 01:03 AM

மீஞ்சூர்:ஒடிஷா மாநிலத்தில் இருந்து, 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10.50 கிலோ கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
வடமாநிலங்களில் இருந்து போதை பொருள் கடத்தி வரப்படுவதை தடுக்கும் வகையில், ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி, செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையிலான போலீசார், மீஞ்சூர், மணலி, அத்திப்பட்டு, எண்ணுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
சோழவரம் அருகே உள்ள சோதனைச்சாவடி பகுதியில் வாகனங்களை சோதனை செய்தனர். அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10.50 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிந்தது.
தொடர் விசாரணையில், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்தர், 38, என்பதும், ஒடிஷா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரிந்தது. ரவீந்தரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.