/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தன்னிச்சையாக செயல்படும் மணலி மண்டல அதிகாரிகள் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு..
/
தன்னிச்சையாக செயல்படும் மணலி மண்டல அதிகாரிகள் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு..
தன்னிச்சையாக செயல்படும் மணலி மண்டல அதிகாரிகள் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு..
தன்னிச்சையாக செயல்படும் மணலி மண்டல அதிகாரிகள் கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு..
ADDED : பிப் 17, 2025 01:32 AM
மணலி: மணலி மண்டல குழு கூட்டம், கடந்த வெள்ளிக்கிழமை மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. இதில், செயற்பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், 110 தீர்மானங்கள் நிறைவேறின.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வார்டின் தேவைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசியதாவது:
ஜெய்சங்கர், 17வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: தீயம்பாக்கம், அரியலுார், காந்தி நகர், பெரியார் நகர் மக்கள், 3 கி.மீ., பயணித்து, கொசப்பூர் நியாய விலைக் கடைக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியிருப்பதால், சிரமம் உள்ளது.
தீயம்பாக்கம் பொதுக் கழிப்பறை இடியும் தருவாயில் உள்ளது. ரெடிமிக்ஸ் சிமென்ட் கலவை தயாரிக்கும் நிறுவனத்தால், மாசு அதிகரித்துள்ளது.
தீர்த்தி, 22வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர்: பயோ காஸ் உற்பத்தி மையத்தால், துர்நாற்றம் வீசுவதாக கூறி, ஒரு மாதமாகி விட்டது. அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கூட்டத்தின் போது தான், கவுன்சிலராக மதிக்கின்றனர். மற்ற நேரங்களில் மதிப்பது கூட கிடையாது. சின்னசேக்காடு பகுதியில், முதியோர், விதவை பென்சன் கிடைக்கவில்லை.
காசிநாதன், 19வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: இதுவரை, 32 கூட்டங்கள் நடந்து விட்டது. பிற துறை அதிகாரிகள் யாருமே பங்கேற்பதில்லை. என் வார்டில் மக்கள் தொகை அதிகம். இரண்டு உதவி பொறியாளர்கள் தேவை.
ஆறு மாதமாக உதவிபொறியாளர் கிடையாது. பணிகள் நடப்பதில் தொய்வு உள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றுவதில் பாரபட்சம் காட்டுகின்றனர்.
நந்தினி, 15வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: பூங்காக்களில் மின்மோட்டார் இயங்காததால் செடிகள் பட்டு போகின்றன. கால்நடைகள், தெருநாய் பிரச்னை உள்ளது. தெருவிளக்குகளை மறைத்துள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.
மேற்கூறிய பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுப்பதாக, மணலி மண்டல அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் காட்டும் மெத்தனமே பல்வேறு பிரச்னைகளுக்கு காரணம் என, கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.