/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மணப்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணிகள் ரூ.12 கோடியில் துவக்கம்
/
மணப்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணிகள் ரூ.12 கோடியில் துவக்கம்
மணப்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணிகள் ரூ.12 கோடியில் துவக்கம்
மணப்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணிகள் ரூ.12 கோடியில் துவக்கம்
ADDED : ஜூலை 13, 2025 12:22 AM

முகலிவாக்கம் மணப்பாக்கம் கால்வாயில், 12.90 கோடி ரூபாயில் வெள்ள தடுப்பு பணிகளை, அமைச்சர் அன்பரசன் நேற்று துவக்கி வைத்தார்.
போரூர் ஏரி, சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இரு மாவட்டங்களிலும் நீர்ப்பிடிப்பு பகுதியை கொண்டுள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு, 67 மில்லியன் கன அடி.
மொத்தம், 252 ஏக்கர் நீர்பரப்பு கொண்ட இந்த ஏரியின் உபரி நீர், மணப்பாக்கம் கால்வாயில், 6,935 மீட்டர் துாரம் பாய்ந்து, அடையாறு ஆற்றில் கலக்கிறது. மணப்பாக்கம் கால்வாயிலிருந்து கெருகம்பாக்கம், கொளப்பாக்கம் -1, 2 என, மூன்று கிளை கால்வாய்கள் பிரிந்து செல்கின்றன.
இவற்றில், சில இடங்களில் குறுகலாகவும், உயரம் குறைந்தும் உள்ளன. மணப்பாக்கம் கால்வாயில் மூன்று இடங்களில் சிறு பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் சகதி நிறைந்து, செடி, கொடி வளர்ந்து நீரோட்டம் பாதிக்கும் நிலை இருந்தது.
வரும் பருவமழையின்போது, மழை அளவு அதிகரித்தால் முகலிவாக்கம், மணப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்படும் என, நம் நாளிதழில் படத்துடன் கூடிய விரிவான செய்தி, சமீபத்தில் வெளியானது.
அதன் விளைவாக, மணப்பாக்கம் கால்வாயில், 12.90 கோடி ரூபாயில் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ள முடிவானது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும், தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பரசன், அப்பணிகளை பூமி பூஜையுடன் நேற்று துவக்கி வைத்தார். இதில், மண்டல குழு தலைவர் சந்திரன், கவுன்சிலர்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
போரூர் ஏரியின் வெள்ள பாதிப்புகளை தவிர்க்க, 2022 - -23ல், 100 கோடி ரூபாயிலும், 2023- - 24ல், 84.93 கோடி ரூபாயிலும் வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, கெருகம்பாக்கம் கால்வாய், மணப்பாக்கம் கால்வாய் ஆகியவை, 12.90 கோடி ரூபாயில் துார்வாரி, தேவையான இடங்களில் இரு பக்க கரைகளை உயர்த்தி, வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தப் பணிகளால், மவுலிவாக்கம், போரூர், பெரியபணச்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம் முகலிவாக்கம் மற்றும் மணப்பாக்கம் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.