/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் வாரிய பிரச்னை ஏராளம் ஆலந்துார் கவுன்சிலர்கள் வாதம்
/
குடிநீர் வாரிய பிரச்னை ஏராளம் ஆலந்துார் கவுன்சிலர்கள் வாதம்
குடிநீர் வாரிய பிரச்னை ஏராளம் ஆலந்துார் கவுன்சிலர்கள் வாதம்
குடிநீர் வாரிய பிரச்னை ஏராளம் ஆலந்துார் கவுன்சிலர்கள் வாதம்
ADDED : நவ 13, 2024 09:43 PM
ஆலந்துார்:ஆலந்துார் மண்டல குழு கூட்டம், அதன் தலைவர் சந்திரன் தலைமையில், நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் ஸ்ரீனிவாசன், அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் கூறியதாவது:
ஆதம்பாக்கம், புதுப்பேட்டை பகுதியில் ஏராளமான மாடுகள், நாய்கள் சுற்றி திரிகின்றன. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். ராமகிருஷ்ணன் சாலையில் நிறுத்தப்பட்டுள்ள குப்பை தொட்டிகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
நந்தம்பாக்கத்தில் பாதாள சாக்கடை குழாய் இணைப்பிற்கு தோண்டிய பள்ளம் மூடாததால் போக்குவரத்து சிக்கலும், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயமும் உள்ளது. உடனடியாக சீரமைக்க வேண்டும்.
கணபதிபுரம், துளசிங்கபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மீனம்பாக்கம், ஜி.எஸ்.டி., சாலை சிக்னலில் 'யு - டர்ன்' அமைக்க வேண்டும்.
அப்பகுதியில், 15 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ளது. பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றிய இடத்தில் புதிய தொட்டி அமைக்க வேண்டும்.
நங்கநல்லுாரில் செயல்படாத 'அம்மா' குடிநீர் மையத்தை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
சில இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு விடுபட்டுள்ளது. உடனடியாக இணைப்பு வழங்கி மழைநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
முகலிவாக்கத்தில் பல ஆண்டுகளாக, 40 தெருக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மண்டல குழு கூட்டத்திலும் கோரிக்கை வைத்தும், நடவடிக்கை எடுக்கவில்லை.
கேட்டால், 'நிதி பற்றாக்குறையால் குழாய் இணைப்பு வழங்க முடியாத நிலை உள்ளது' என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மக்களோ, 'குடிநீர் வரும் ஆனா வராது' என வடிவேல் பாணியில் கிண்டல் அடிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மண்டல குழு தலைவர் சந்திரன் பேசுகையில், ''பல வார்டுகளில் குடிநீர் இணைப்பு பிரச்னை உள்ளது. இதற்கு 'நிதி இல்லை' என்ற ஒரே பதிலை கூறுவது சரியாக இருக்காது. நிதி பெறுவதற்கான வழிமுறைகளை குடிநர் வாரியம் மேற்கொள்ள வேண்டும்.
''டெங்கு, தொடர் காய்ச்சல் அதிகரித்து வருவதால் சுகாதாரத்துறை தனி கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார்.

