/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாரத்தான்: 3,500 பேர் உற்சாகமாக பங்கேற்பு
/
மாரத்தான்: 3,500 பேர் உற்சாகமாக பங்கேற்பு
ADDED : அக் 06, 2025 02:55 AM

சென்னை: புற்றுநோயாளிகளின் சிகிச்சை நிதிக்காக, நேற்று நடந்த, 'டி2டி' சென்னை மாரத்தான் போட்டியில், 3,500 பேர் உற்சாகமாக பங்கேற்றனர்.
'நெவில் என்டெவர்ஸ் பவுண்டேசன்' சார்பில், 8வது 'டான் டு டஸ்க்' எனும் 'டி2டி' சென்னை மாரத்தான் - 2025 போட்டி, நேற்று காலை, கிண்டி அண்ணா பல்கலை வளாகத்தில் நடந்தது. காலை 5:00 மணிக்கு துவங்கிய மாரத்தான் போட்டியை, சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார் .
இதில், மூன்று, ஐந்து, 10, 16, 25, 21., கி.மீ., பிரிவுகளில் தனித்தனியாக ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. அதே போல், 125, 100, 75, 50, 25 கி.மீ., சைக்கிளிங் போட்டியும் நடந்தது. அனைத்து போட்டிகளிலும், மொத்தம் 3,500 பேர் பங்கேற்றனர்.
இதில், பவுண்டேசன் தலைவர் நெவில் பிலிமோரியா, ஓய்வுபெற்ற டி.ஜி.பி., சைலேந்திர பாபு, நடிகர் ஆர்யா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இவர்களுடன் பல்வேறு நிறுவன தலைவர்கள், இயக்குநர்களும் பங்கேற்றனர். சிறுவர்களுக்கும் சிறப்பு போட்டிகள் நடந்தன.
இதுகுறித்து, தேசிய விளையாட்டு வீரான நெவில் பிலிமோரியா கூறுகையில், ''சென்னை மாரத்தான் போட்டி, புற்றுநோய் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான நிதிக்காக நடத்தப்படுகிறது. கடந்த ஏழு சீசன் வரை, 4 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து நிதி வழங்கியுள்ளோம்'' என்றார்.
அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:
இந்த மாரத்தான் போட்டி, உடற்பயிற்சிக்காக மட்டுமில்லாமல், புற்றுநோய்க்கான விழிப்புணர்வுக்காகவும் நடத்தப்பட்டு வருகிறது. புற்றுநோய், இதய பாதிப்பு அதிகரிப்பதற்கான தீர்வாக, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ள வேண்டும்.
நான் இதுவரை, 12 ஆண்டுகளில், 14 நாடுகளில், 163 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். விபத்தில் கால் பிரச்னை இருந்தும், ஓடுவதில் உலக சாதனை படைத்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.