/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மார்கழி இசை - மதுரை சித்திரை திருவிழா நிகழ்வு நாட்டிய நாடகத்தில் கலைஞர்கள் அசத்தல்
/
மார்கழி இசை - மதுரை சித்திரை திருவிழா நிகழ்வு நாட்டிய நாடகத்தில் கலைஞர்கள் அசத்தல்
மார்கழி இசை - மதுரை சித்திரை திருவிழா நிகழ்வு நாட்டிய நாடகத்தில் கலைஞர்கள் அசத்தல்
மார்கழி இசை - மதுரை சித்திரை திருவிழா நிகழ்வு நாட்டிய நாடகத்தில் கலைஞர்கள் அசத்தல்
ADDED : ஜன 09, 2025 02:50 AM

மதுரை சித்திரை திருவிழா மற்றும் அழகர் சேவை, கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் ஏற்பாடு செய்திருந்த நாட்டிய விழாவில் அரங்கேறியது. மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் இதை அரங்கேற்றியது, ரோஜா கண்ணன், பிரியா முரளி மற்றும் பரசஹா நாட்டிய பள்ளி மாணவர்கள். மீனாட்சி சுந்தர நாமத்துடன், நிகழ்ச்சியை துவங்கினர்.
வைகை நதி, மார்கழி நிகழ்ச்சிக்கு வருகை தந்து, திருவிழா எவ்வாறு நடக்கிறது என்பதையும், அவ்வப்போது நகைச்சுவையோடு மதுரையின் வட்டார மொழி, நகரின் தனித்தன்மைகளை எடுத்துக்கூறும் கதைக்களமாக அமைந்தது.
முதலில், கொடியேற்றதுடன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவிழா, மல்லாரியில் துவங்கியது. கற்பக விருட்சம் அடவு, கண்களுக்கு காட்சியானது.
பூதகணங்களின் கர்ஜனையுடன், ஈசனின் பூதவாகனமும், மீனாட்சியின் அன்ன வாகனம் உலா வந்தது.
பின், பக்தியில் தானே பெரியவன் என ராவணன் திகழ, அவன் கர்வத்தை அழிக்க, சிவபெருமான் தன் கட்டை விரலை இமயமலையாக வைக்கிறார். அதை துாக்க முடியாமல், ராவணன் தவிக்கிறார். பின், தன் உடல் உறுப்புகளில் இருந்து வீணை செய்து இசை மீட்டி, சிவபெருமானின் கோபம் தணிக்கும் நிகழ்வு, நாட்டியத்தில் காட்டியவிதம் அருமையாக இருந்தது.
'ஆலவாய் அப்பனே அருள்வாயோ...' என புறப்பாடு ஆகியது, ராவணனின் கயிலாச பருவத வாகனம்.
அடுத்ததாக, கோவில் மண்டபத்தில், தங்க பல்லக்கில் மீனாட்சியும், சுந்தரேசரரும், தனித்தனியே பவனி வரும் காட்சி நிகழ்த்தப்பட்டது. அதேபோல் குதிரை வாகன சேவை நிகழ்வு, பொய்க்கால் குதிரையோடு அற்புதமாய் அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து, மாணிக்கவாசகரின் சைவநெறி நிகழ்ச்சியும், அதிகார நந்தி சேவையும் நடந்தது. நந்தி சேவையில், பிரியா முரளி ஈசனாக நடனமிடுவது பார்ப்பதற்கு கண்கொள்ள காட்சியாக இருந்தது.
அடுத்ததாக மீனாட்சி பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடந்தது. வேப்பம்பூ மாலையும், வைர கீரிடம் பரிவட்டமும் என அலங்கரிக்க, ஒன்பதாம் நாள் திக்விஜயம் புறப்பட்டாள் மீனாட்சி அன்னை.
அஷ்டதிக்கு பாலகர்களையும் வென்று, போர்க்களத்தில் வெற்றி பெற்றவள், ஈசனை கண்டதும் நாணம் கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு தயாராகிறார்.
இறுதி நாள் விழாவாக, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மாலை மாற்றும் நிகழ்ச்சியுடன், மதுரையில் நடப்பதைபோல் இங்கு நிகழ்த்தியது பாராட்டு வகையில் அமைந்திருந்தது.
தொடர்ந்து கதை களம், கள்ளழகரின் திருவிழாவை வரவேற்க துவங்கியது. மண்டூக மஹரிஷியின் தேரை கதையை சுருக்கமாக சஞ்சரித்து, தங்க நிற குதிரையுடன் அழகர் வருகை ஆரவாரமாய் துவங்கியது.
சிலம்பாட்டமும், கொடியும், குடையும் சூழ பவனி வந்தார். தொடர்ந்து, தண்ணீர் பீய்ச்சும் விழாவும், ஒயிலாட்டமும் நடந்தன.
பெருமானின் 10 அவதாரங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக காட்டி, வைகை ஆற்றில் அழகாய் இறங்கும் கள்ளழகரின் ஆடலோடு, வைகை ஆறு மங்களம் போற்றி, நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.
-மா.அன்புக்கரசி

