/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மார்கழி இசை கச்ரேி - சுதா ரகுநாதன் - 'என்ன தவம் செய்தனை யசோதா' சுதா குரலால் அரங்கத்தில் ஏக்கம்
/
மார்கழி இசை கச்ரேி - சுதா ரகுநாதன் - 'என்ன தவம் செய்தனை யசோதா' சுதா குரலால் அரங்கத்தில் ஏக்கம்
மார்கழி இசை கச்ரேி - சுதா ரகுநாதன் - 'என்ன தவம் செய்தனை யசோதா' சுதா குரலால் அரங்கத்தில் ஏக்கம்
மார்கழி இசை கச்ரேி - சுதா ரகுநாதன் - 'என்ன தவம் செய்தனை யசோதா' சுதா குரலால் அரங்கத்தில் ஏக்கம்
ADDED : டிச 27, 2024 08:45 PM
நளினகாந்தி வர்ணத்தில் நளினமாக ஆரம்பித்து, ரசிகர்களை நெஞ்சுருக வைத்து, காதல் ரசம் வழிய, கச்சேரியை துவக்கினார், இசை உலகின் பிரபல பாடகர் சுதா ரகுநாதன்.
அடுத்ததாக, ஆண்டாள் அருளிய, 'கீசு கீசென்று' திருப்பாவையை, ஆனந்த பைரவியில் பாடி, ஆண்டாள் பக்தி வடிவான காதலை வழிமொழிந்து, தன் ரசிகர்களுக்கு ரசனையை ஊட்டத் துவங்கினார்.
தொடர்ந்து, சியாமா சாஸ்திரியின் 'நன்னு பிரோவு லலிதா' கீர்த்தனையை, லலிதா ராகம், மிஸ்ர சாபு தாளத்தில் பாடும்போது, அவரது ஆலாபனைகளில், இசை உலகில் அவர் பெற்ற அனுபவத்தின் ஆழம் புலப்பட்டது. அரங்கின் கைத்தட்டல்கள், அதை உறுதி செய்யும் விதமாக அதிர்ந்தது.
அடுத்து, 'பாகீரதி தேவி பய நிவாரணி' எனும் புரந்தரதாஸரின் கீர்த்தனையை, கங்கா ராகம், கண்ட சாபு தாளத்தில் அமைத்த விதம் அருமை. இதற்கு, எம்பார் கண்ணன் வயலின் வாசிக்கும் போது, அரங்கில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், இசை மயக்கத்தில் 'உச்' கொட்டி ரசித்தார்; ஒரு பானை சோற்று ஒரு சோறு பதம் அல்லவா!
அடுத்து, ராகம் தானம் பல்லவியை, சிம்ஹேந்திர மத்யம ராகம், கண்டஜாதி ஜம்ப தாளத்தில் அமைத்து, 'குஹா வா… முருகா வா… சண்முகா நீ வா…' என்ற வரிகளுக்கு, ராகமாலிகா ஸ்வரம் கோர்த்தவிதம் கேட்போரை கிரங்கச் செய்தது.
தனி ஆவர்த்தனத்தில், மிருதங்கத்தில் நெய்வேலி ஸ்கந்தசுப்பிரணியமும், மோர்சிங்கில் ராமனும் கச்சேரிக்கு மெருகேற்றினர்.
அதோடு, 'கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்' என்ற வாலியின் வரிகளுக்கு உயிர் கொடுத்து பாடும்போது, குன்றின் மீதிருக்கும் குமரனே குரல் கொடுத்தது போல மனதிலே ஒரு தீண்டல் உண்டாயிற்று.
பிரம்மிப்பில் இருந்தோருக்கு காத்திருந்தது, அடுத்த சுவாரஸ்யம். பாபநாசம் சிவன் இயற்றிய 'என்ன தவம் செய்தனை யசோதா' என்ற கீர்த்தனையை, கபி ராகத்தில் பாடும் போது, அனைத்து தலைகளும் இட வலமாக ஆடியபடியே இருந்தன. அனைவர் முகங்களிலும் இனம் புரியாத ஏக்கம் அல்லாடியது.
இறுதியாக, 'கேசவா மாதவா' எனும் மராத்தி அபங்கை பாடி மங்களமாக முடித்தார். நாரத கான சபாவில் எழுந்து நின்று கைத்தட்டல்கள் வழங்கி, தங்கள் ஆர்த்மார்த்தமான அன்பை பரிசாக வழங்கினர் ரசிகர்கள்.
- நமது நிருபர் -

