/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆமைகளை பாதுகாக்க 'கடல் உயரடுக்கு படை' புது முயற்சி அத்துமீறினால் படகுகள் பறிமுதல், மீனவர்கள் கைது
/
ஆமைகளை பாதுகாக்க 'கடல் உயரடுக்கு படை' புது முயற்சி அத்துமீறினால் படகுகள் பறிமுதல், மீனவர்கள் கைது
ஆமைகளை பாதுகாக்க 'கடல் உயரடுக்கு படை' புது முயற்சி அத்துமீறினால் படகுகள் பறிமுதல், மீனவர்கள் கைது
ஆமைகளை பாதுகாக்க 'கடல் உயரடுக்கு படை' புது முயற்சி அத்துமீறினால் படகுகள் பறிமுதல், மீனவர்கள் கைது
ADDED : நவ 20, 2025 12:10 AM

கடந்தாண்டில் சென்னை கடலோரப் பகுதிகளில், கொத்துக்கொத்தாக கடல் ஆமைகள் இறந்தது சர்ச்சையான நிலையில், ஆமைகளை பாதுகாக்க வனத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட நான்கு துறைகள் ஒருங்கிணைந்து, 'கடல் உயரடுக்கு படை' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படையினர் ரோந்து சென்று, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்கும் படகுகளை பறிமுதல் செய்வது, ஆமைகள் உயிருக்கு சேதம் ஏற்படுத்துவோரை கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் என, வனத்துறை அதிகாரிகள் கூறினர். சென்னையில் பெசன்ட் நகர், நீலாங்கரை, கோவளம், பழவேற்காடு ஆகிய கடற்கரைகளில், ஜனவரி முதல் மார்ச் வரை, ஆமைகள் முட்டையிட வரும். ஒவ்வொரு ஆண்டும், 500க்கும் மேற்பட்ட ஆமைகள், 60,000க்கும் அதிகமாக முட்டைகள் இடும். அவை 45 நாட்களில் குஞ்சு பொரித்து, கடலுக்கு செல்லும். இதற்காக குஞ்சு பொரிப்பகம் உள்ளிட்ட பணிகளை, வனத்துறை மேற்கொள்ளும்.
ஆனால். கடந்தாண்டு ஏராளமான ஆமைகள் கடலில் இறந்து கரை ஒதுங்கின. இது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
கரையில் இருந்து 9.2 கி.மீட்டரில் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும். அங்கு மீன்களும் அதிகளவில் இருக்கும். அதனால், அப்பகுதியில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மீனவர்கள் அதிக திறனுடைய மோட்டார்கள் பொருத்திய, கப்பல் போன்ற நவீன படகுகளை பயன்படுத்தி, ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளில் மீன்பிடிக்கின்றனர்.
தடைவிதிக்கப்பட்ட சுருக்குமடி வலைகளையும் பயன்படுத்தினர். இதனால், படகுகளில் அடிபட்டும், வலைகளில் சிக்கியும் ஏராளமான ஆமைகள் இறந்தன.
அதேபோல், இரவில் முட்டையிட கரைக்கு வரும் ஆமைகள் மற்றும் குஞ்சு பொரித்த ஆமை குஞ்சுகள், நிலா வெளிச்சத்தை வைத்து கடலுக்குள் செல்லும்.
கடற்கரையில் உள்ள தெரு விளக்கு மற்றும் வீடுகளில் உள்ள அதிக திறனுடைய மின்விளக்குகள் எரிவதால், அவை திசை மாறி செல்கின்றன. அப்படி செல்லும் ஆமைகளை, நாய்கள், பறவைகள் சாகடிக்கும் நிலை ஏற்பட்டது.
இதுபோன்ற காரணங்களால், கடந்தாண்டு ஏராளமான ஆமைகள் இறந்தன. இந்த நிலை இந்தாண்டு வராமல் இருக்க, அரசு முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சுருக்குமடி வலை வனத்துறை, மீன்வளத்துறை, மாநகராட்சி மற்றும் கடலோர காவல் படையினர் என, நான்கு துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட, 'கடல்சார் உயரடுக்கு படை' என்ற பிரிவை, தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து, வனத்துறையின் வன உயிரின காப்பாளர் ஒருவர் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக ஆமைகள் வருவது குறைவதுடன், இறப்பும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற நிலை தொடர்ந்தால், அழிந்து வரும் உயிரினங்களில் ஆமையும் இடம் பெறும்.
ஆமைகள் இனப்பெருக்கம், முட்டையிட வரும் மாதங்களில், 9.2 கி.மீ., துாரம் தீவிர கண்காணிப்பு செய்யப்படும். மீன்பிடிக்க தடை, சுருக்குமடி வலைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதை மீறி ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் இடத்தில் மீன்பிடிக்க முயன்றால் படகுகள் பறிமுதல் செய்யப்படும்; அபராதம் விதிக்கப்படும். ஆமைகளை கொன்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்.
கடல் பாசி சேதம் இந்த நடவடிக்கைகள், ஆமைகள் இனப்பெருக்க காலமான, டிச., முதல் மார்ச் வரை, எண்ணுார் முதல் பழவேற்காடு வரை மேற்கொள்ளப்படும். இதற்கு மீனவர்கள் முழு ஒத்துழைக்க வேண்டும். ஆமைகளை பாதுகாக்க, தன்னார்வலர்கள் உதவியையும் நாடி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வனத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
மீன்பிடி தடைக்காலம் முடிந்ததும், ஒவ்வொரு ஆண்டும், 9.2 கி.மீ., துாரத்தில் மீனவர்கள் சுருக்குமடி வலை, நவீன படகுகளை பயன்படுத்துகின்றனரா என கண்காணிக்க, எங்களுக்கு ரோந்து படகு இல்லை.
வணிக நோக்கத்தை உடைய சில மீனவர்கள், அதிகப்படியான மீன்பிடிக்க ஆசைப்பட்டு, வலையில் சிக்கும் ஆமைகளை கொன்றுவிடுவர்; கடல் பாசியையும் சேதப்படுத்துவர்.
இதனால், கடல்வளம் பாதிக்கும். தற்போது, ஒருங்கிணைந்த ரோந்து படை அமைக்கப்பட்டுள்ளதால், இது போன்ற சம்பவங்களை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மீனவர்கள் சிலர் கூறியதாவது:
மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியபடி தான் மீன்பிடிக்கிறோம். பல லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆழ்கடல் சென்று மீன்பிடிக்கும் சிலர், 9.2 கி.மீ., துாரத்திற்கும் சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிப்பர்.
அவர்கள் செய்யும் தவறால் நாங்களும் பாதிக்கப்படுகிறோம். ஒருங்கிணைந்த ரோந்து படை அமைத்துள்ளதால், எங்களால் நிம்மதியாக மீன் பிடிக்க முடியும்; ஆமைகளும் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

