/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மார்டின் வீடு, அலுவலங்களில் மீண்டும் ரெய்டு
/
மார்டின் வீடு, அலுவலங்களில் மீண்டும் ரெய்டு
UPDATED : நவ 15, 2024 02:28 AM
ADDED : நவ 14, 2024 11:32 PM

சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தினர்.
கோவை துடியலுார் அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் வசிப்பவர் மார்ட்டின், 53; லாட்டரி அதிபர். தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை உள்ள நிலையில், நாட்டின் வேறு பல மாநிலங்களில் அரசுடன் ஒப்பந்தம் போட்டு, லாட்டரி தொழில் நடத்துகிறார்.
மோசடி
'லாட்டரி கிங்' என்றே இவரை சொல்கின்றனர். தேர்தல் பத்திரங்கள் வாயிலாக கட்சிகளுக்கு, 1,300 கோடி ரூபாய் வரை நன்கொடை வழங்கி உள்ளார்.
சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை போலியாக அச்சடித்து, 910 கோடி ரூபாய் வரை சம்பாதித்து உள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
இது தொடர்பான விசாரணையில் மார்ட்டினும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து அந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன் அடிப்படையில், மார்ட்டின் மற்றும் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான 70 இடங்களில் வருமான வரி அதிகாரிகள், 2019ல் சோதனை நடத்தினர்; முக்கிய ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
மோசடியில் சம்பாதித்த பணத்தை, 40 நிறுவனங்களில் முதலீடு செய்ததும் தெரிய வந்தது. பணம் கைமாறியது ஊர்ஜிதமானதால், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, இரண்டு நாள் சோதனை நடத்தி, 457 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கினர்.
7.25 கோடி ரூபாய்
இதற்கிடையே, சென்னை நங்கநல்லுாரில் நாகராஜன் என்பவர் வீட்டில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்திய போது, 7.25 கோடி ரூபாய் சிக்கியது.
இது, மஹாராஷ்டிரா, கேரளாவில் லாட்டரி சீட்டு விற்றதால் கிடைத்த தொகை என்றும், மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானது என்றும் நாகராஜன் வாக்குமூலம் அளித்தார்.
அதன் அடிப்படையில் மார்ட்டின், லீமா ரோஸ் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அமலாக்க துறையும் உள்ளே வந்தது. அடுத்த ஆறேழு மாதத்தில் ஒரு திருப்பம் நேர்ந்தது.
நங்கநல்லுாரில் நாகராஜனிடம் கைப்பற்றிய பணம் சம்பந்தமாக எந்த முறைகேடும் நடக்கவில்லை என, அதே மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஆலந்துார் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தனர். நீதிபதியும் அதை ஏற்று, மார்ட்டின், லீமா ரோஸ் மீதான வழக்கை ரத்து செய்தார்.
உத்தரவு
அதை எதிர்த்து, ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை அப்பீல் செய்தது. ஆலந்துார் நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட், மார்ட்டின் உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசாரும், அமலாக்கத் துறையும் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கோவை துடியலுாரில் உள்ள மார்ட்டின் பங்களா, ஹோமியோபதி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 'மார்ட்டின் மில்ஸ் ஆப் கம்பெனி இன்ஸ்டிடியூஷன்' என்ற கார்ப்பரேட் அலுவலகம் போன்றவற்றில் சோதனை நடத்தினர்.
ஆவணங்கள்
மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா வீடு, சென்னை போயஸ் கார்டனில் உள்ளது. அங்கும் சோதனை நடத்தினர். ஆதவ் அர்ஜுனா, தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலராக உள்ளார்.
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில், மார்ட்டினுக்கு சொந்தமான, 'டிவி' நிறுவனம், ஹரியானா மாநிலம் பரிதாபாத், பஞ்சாபில் உள்ள லுாதியானா, மேற்கு வங்கத்தில் கோல்கட்டா நகரில் உள்ள மார்ட்டின் குடும்பத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தினர். கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

